ஷா ஆலாம், செப்.18: செலாயாங் ஊராட்சி மன்றத்தில் (MPS) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்த ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகரைத் தொடர்ந்து, நகராட்சி மன்றம் உள்விசாரணையைத் தொடங்கியுள்ளது.
புகார்தாரரின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு வெளியானது, அதற்கான காரணம் என்ன, சம்பவத்தின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எம்.பி.எஸ். நிறுவனத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
தங்களது பணியாளர்கள் தொடர்பான எந்தவொரு முறைகேட்டையும் எம்.பி.எஸ். ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அந்தத் துறை திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அதிகாரப்பூர்வமாகபொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மற்றும் புகார்தாரர்களின் தகவல்களின் இரகசியத்தன்மை மற்றும் அவற்றைக் கையாளும் நடைமுறைகளுக்கு எம்.பி.எஸ். எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் விதிமுறைகள் மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.பி.எஸ். தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், எம்.பி.எஸ்.-க்கு புகார் அளித்த தமது தனிப்பட்ட தகவல்கள் கசிந்துவிட்டதாக ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தாம் புகார் அளித்திருந்த கடையின் உரிமையாளர், தமது வீட்டிற்கு நேரடியாக வந்து ஏன் அந்தப் புகாரை அளித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதாக 36 வயதான ரகு நடராஜா தெரிவித்தார்.
அந்தக் கடை உரிமையாளர், எம்.பி.எஸ். அலுவலக கவுன்டரில் அபராதத் தொகையைச் செலுத்தச் சென்றபோது, தம்மைப் பற்றிய தகவல்களை ஊராட்சி மன்றத் தரப்பிலிருந்து பெற்றுள்ளார் என ரகு தெரிவித்தார்.
நேற்று நண்பகல் 12 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், ஆரம்பத்தில் மூன்று பேர் தமது வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் அவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்ததாகவும் தெரிவித்தார்.
இதனால் தாம் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக உணர்ந்து காவல்துறையைத் தொடர்புகொண்டதாகவும் ரகு கூறினார்.
ஜாலான் வெல்மன் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அருகில் வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினை குறித்து, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஆறு முறை எம்.பி.எஸ்.-க்கு புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பலமுறை புகார் அளித்த போதிலும் இதுவரை எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்று ரகு குற்றஞ்சாட்டினார்.
புகார்தாரரின் தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு கசிந்தன என்பது தொடர்பான எம்.பி.எஸ்.-ன் உள்விசாரணையின் முடிவு வெளியாகும் வரை, இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனத்திற்குரியதாக இருக்கும்.







