ஷா ஆலம், ஏப்ரல் 13: கெப்போங், தாமான் டாயா பகுதியில் உள்ள விளையாட்டுத் திடலை மேம்படுத்தி தரம் உயர்த்துவதற்காகச் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) 1 லட்சத்து 98 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்துள்ளது.
நீண்டகாலமாகப் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்தத் திடலில் நவீன வசதிகளைச் சேர்த்து, அதனை ஒரு முழுமையான பொழுதுபோக்குத் தளமாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இது குறித்துப் புக்கிட் லாஞ்சான் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த மேம்பாட்டுப் பணிகளில் பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கான பிரத்யேகப் பாதை (Walkway), திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் (Outdoor Gym), அமர்வதற்கான இருக்கைகள், உடல் நலத்தைப் பேணும் ரிஃப்ளெக்சாலஜி (Reflexology) பாதை, மழை மற்றும் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள நிழற்குடைகள் மற்றும் பூங்காவிற்கான புதிய தகவல் பலகைகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
செலாயாங் நகராண்மை கழகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டப் பணிகள் அனைத்தும் மூன்று மாதக் காலத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய வசதிகள் அப்பகுதி மக்கள் மிகவும் பாதுகாப்பான, வசதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சூழலில் தங்களின் ஓய்வு நேரத்தைச் செலவிடவும், உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் ஒரு உந்துதலாக அமையும் என்று சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங் நம்பிக்கை தெரிவித்தார்.







