ஷா ஆலம், ஜூலை 17: செலாயாங் நகராண்மைக் கழகம் (MPS), கடந்த ஜூலை 14-ஆம் தேதி பத்து கேவ்ஸ், தாமான் ஸ்ரீ பத்து கேவ்ஸ் 1, 2 மற்றும் 3 ஆகிய பகுதிகளில் நடத்திய சுற்றுச்சூழல் அமலாக்க நடவடிக்கையின் போது, வணிக வளாகங்களுக்கு எதிராக எட்டு அபராதங்களை விதித்தது.
ஒவ்வொரு வணிக வளாகமும் தங்களுக்கென தனித்தனி குப்பைத் தொட்டி வசதிகளை ஏற்படுத்தியிருப்பதையும், நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதற்கான உத்தரவுகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத் துறை (JPSPK) இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக எம்பிஎஸ் தெரிவித்தது.
மொத்தம் 126 வளாகங்கள் பரிசோதிக்கப்பட்டு, பல்வேறு குற்றங்களுக்காக எட்டு அபராத நோட்டிஸ் வழங்கப்பட்டன," என்று எம்பிஎஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் போது மூன்று பொதுக் குப்பைத் தொட்டி மையங்கள் மூடப்பட்டன.
அந்த மையங்களில் குப்பைகள் நிரம்பியிருந்ததுடன், பொறுப்பற்ற நபர்களால் தொழில்துறை கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டும் இடமாகவும் அவை பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அந்தக் குப்பைத் தொட்டி மையங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வணிக வளாகத்திற்கும் கேடிஇபிடபிள்யூஎம் (KDEBWM) திடக்கழிவு நிர்வகிப்பு நிறுவனத் தரப்புச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் என்று அது கூறியது.
இவ்வேளையில் பொது இடங்களிலோ அல்லது எம்பிஎஸ் அனுமதியளிக்காத இடங்களிலோ குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என்று எம்பிஎஸ் பொதுமக்களை நினைவூட்டியுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு, குப்பை சேகரிப்பு, அகற்றுதல் மற்றும் விநியோகம் செய்வதற்கான துணைச் சட்டம் (MPS) 2007-ன் கீழ் 1,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்க முடியும்.









