ஷா ஆலம், மே 26: பழுதடைந்த மற்றும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள 70-க்கும் மேற்பட்ட சமூகக் கூடங்களை (Community Halls) மீண்டும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, கோம்பாக் மாவட்ட மற்றும் நில அலுவலகத்துடன் இணைந்து செலாயாங் நகராண்மைக்கழகம் (MPS) தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
நகராண்மைக்கழக எல்லைக்குள் இதுபோன்று கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் 73 சமூகக் கூடங்களை அடையாளம் கண்டுள்ளதாக அதன் தலைவர் ஷாஹ்மான் ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை 1980 மற்றும் 1990-களின் காலகட்டத்தில் தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் மற்றும் அரசியல் கட்சிகளால் கட்டப்பட்டவை என்று 'தி ஸ்டார்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பண்டார் பாரு செலாயாங்கில் நடைபெற்ற நகராண்மைக்கழகத்தின் மாதாந்திர முழு வாரியக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஷாஹ்மான், துரதிர்ஷ்டவசமாக இந்தக்கூடங்களில் சில முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, முறையான பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கவலை தெரிவித்த அவர், இந்தச் சமூகக் கூடங்களை முறையாக அரசிதழில் பதிவு செய்து, அவற்றை நகராண்மைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முன்னதாக, அவற்றின் உரிமையாளர் நிலை மற்றும் நிலப் பத்திரங்கள் குறித்த ஆய்வுகளைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
இந்த ஆய்வுகளின் அடிப்படையில், கிராமப்புறங்களில் உள்ள அரசு நிலங்களில் அமைந்துள்ள கூடங்கள் மாவட்ட மற்றும் நில அலுவலகத்தின் கீழ் ஒப்படைக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றும், அதே வேளையில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கூடங்கள் செலாயாங் நகராண்மைக்கழகத்தின் கீழ் அரசிதழில் பதிவு செய்யப்படும் என்றும் அவர் விளக்கினார்.
தனியார் நிலங்களில் அமைந்துள்ள கட்டடங்களின் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து மேலும் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்தச் சமூகக் கூடங்களின் பாதுகாப்புப் பலவீனம் குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்திய மண்டலம் 5-இன் நகராண்மைக்கழக உறுப்பினர் நூரைமி ஹானி அகமட் சுஹைமி, கடந்த ஆண்டு தாமான் செலாசேவில் உள்ள சமூகக் கூடத்தின் மேல்தளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.
அங்குள்ள அலுவலகத்திற்கு மேலே இருந்த மேல்தளம் முற்றிலும் பழுதடைந்து, மக்கிப்போகத் தொடங்கியதே இதற்குக் காரணம் என்று தங்களது ஒப்பந்தக்காரர்கள் கண்டறிந்ததாக அவர் விவரித்தார்.
நகராண்மைக் கழகத்தின் இந்த மீட்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள மண்டலம் 24-இன் நகராண்மைக்கழக உறுப்பினர் ஃபொக் வாய் முன், இக்கூடங்களை அரசிதழில் பதிவு செய்வதன் மூலம், செலாயாங் நகராண்மைக்கழகம் இந்த வசதிகளை முறையாகப் பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்குச் சிறந்த முறையில் வழங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.







