ஜப்பானில் 100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கை 1.07 லட்சத்தைத் தாண்டியது

15 செப்டெம்பர் 2026, 9:18 AM
ஜப்பானில் 100 வயதைக் கடந்தோர் எண்ணிக்கை 1.07 லட்சத்தைத் தாண்டியது

தோக்கியோ, செப்.15 — ஜப்பானில் 100 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோரின் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் 107,677 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 56ஆவது ஆண்டாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 7,914 பேராக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

100 வயதைக் கடந்தவர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். அதாவது மொத்த எண்ணிக்கையில் 87.6 விழுக்காடு பெண்களாவர்.

மருத்துவத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அதிகமானோர் நீண்ட ஆயுளைப் பெற்று தொடர்ந்து சுறுசுறுப்பாக வாழ்வது மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்கிடையில், ஜப்பானில் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதுடன், முதியோர் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமூகப் பாதுகாப்புக்கான அரசாங்கச் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.

ஏற்கெனவே முன்னேறிய முக்கிய பொருளாதார நாடுகளில் மோசமான நிதிநிலை கொண்ட நாடாக ஜப்பான் காணப்படும் நிலையில், சமூகப் பாதுகாப்புச் செலவினங்களின் அதிகரிப்பு அந்நாட்டின் பொது நிதிக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனிடையே, ஜப்பானின் அதிக வயதுடைய பெண்ணாக கியோட்டோவைச் சேர்ந்த ஃபுயோ கிஷிமோட்டோ, 114, உள்ளார்.

அதேவேளையில், குமமோட்டோவைச் சேர்ந்த ஹிகாரு கட்டோ, 112, ஜப்பானின் அதிக வயதுடைய ஆணாக உள்ளார்.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.