தோக்கியோ, ஜூலை 22 - ஜப்பானில் முன்பு இல்லாத அளவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சில நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசாங்கம் இந்நாளை "கடும் வெப்ப நாள்" (Kokushobi) எனப் புதிதாக வகைப்படுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு வெப்ப பக்கவாத (Heatstroke) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தோக்கியோவிற்கு வடக்கே உள்ள குமாகாயா மற்றும் மத்திய ஜப்பானில் உள்ள நகோயா ஆகிய நகரங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்பதால், இந்த 'கொகுஷோபி' நிலை நீடிக்கும் எனக் கணித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்துமாறும், அதிகளவில் தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பானில் சமீபத்திய ஆண்டுகளில் கோடைகாலம் மிகவும் கடுமையானதாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டில் நாட்டில் அதிகபட்சம் 41.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு வாரத்தின் தீவிர வெப்ப அலை தொடங்குவதற்கு முன்பாகவே, ஜூலை 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் 4,580 பேர் வெப்ப பக்கவாத பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையக்காலமாக நிலவி வரும் தீவிர வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, 40 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலை பதிவாகும் நாட்களைக் குறிக்க வானிலை ஆய்வு மையம் இந்த 'கொகுஷோபி' என்ற புதிய பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






