அலோர் ஸ்டார், செப்.15 — நேற்றிரவு கூலிம், தாமான் திராமில் உள்ள வீடொன்றில் கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் 39 வயது பெண் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
உயிரிழந்த எஸ். சீலா (39), திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், தனது குடும்பத்தினரிடம் கணவருடனான பிரச்சனைகள் குறித்து ஒருபோதும் புகார் தெரிவித்ததில்லை என அவரது அத்தை டி. கொடிமலர் (42) கூறினார்.

சீலா தன்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாகக் கூறிய கொடிமலர், குடும்பத்தினரின் பார்வையில் கணவன்-மனைவி இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனை இருந்ததாக சீலா தங்களிடம் தெரிவித்திருந்தால், தாங்கள் உரிய நேரத்தில் உதவி செய்து அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அவர் வேதனையுடன் கூறினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் சீலாவின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதனை உடைத்துத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கொடிமலர் தெரிவித்தார்.
மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவரான சீலா, படுக்கையில் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவரது மார்புப் பகுதியிலிருந்து தொப்புள் வரையிலான பகுதியில் பல கத்திக்குத்துக் காயங்கள் காணப்பட்டதாகவும் கொடிமலர் கூறினார்.

இதையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக சீலாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததாகக் கூறப்பட்டது.
எனினும், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது இதயச் செயல்பாடு ஏற்கெனவே நின்றுவிட்டதாகக் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர்கள் செயற்கை சுவாசம் மற்றும் இரத்தம் செலுத்தி அவரைக் காப்பாற்ற முயன்றபோதிலும், படுகாயம் காரணமாக சீலா உயிரிழந்ததாக கொடிமலர் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் சீலாவின் உடல் அவரது சொந்த ஊரான பினாங்கு, பெராய், கம்போங் மானிஸுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
சிறுவயது முதலே கம்போங் மானிஸில் வளர்ந்த சீலாவை, குடும்பத்தினர் அங்கேயே நல்லடக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் சீலாவை இறுதியாகச் சந்தித்ததாகக் கூறிய கொடிமலர், அவரைத் துணிச்சலானவராகவும் குடும்பத்தினர் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டவராகவும் வர்ணித்தார்.
இதனிடையே, பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு குடும்ப உறுப்பினர், இந்தச் சம்பவம் தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
சந்தேக நபர் பொதுவாக நட்பாகப் பழகக்கூடியவர் என்றும், மனைவி மற்றும் குழந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்றும் கூறிய அவர், சந்தேக நபர் மதுபானம் அருந்துவதோ புகைப்பிடிப்பதோ இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்துக்குப் பின்னர் சந்தேக நபர் தனது சகோதரரைத் தொடர்புகொண்டு, மூன்று வயதுடைய தனது ஆண் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார்.
பின்னர் இரவு 8.40 மணியளவில் லுனாஸ் காவல் நிலையத்தில் அந்நபர் சரணடைந்தார் என கூலிம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஷியாம்சுல் சின்ரிங் உறுதிப்படுத்தினார்.
தனது மனைவியை வீட்டில் வைத்து 13 முறை கத்தியால் குத்தியதாக அவர் காவல்துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மடிக்கத்தி ஒன்றையும் ஒப்படைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.






