கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட மனைவி - காவல்துறை தீவிர விசாரணை

16 மார்ச் 2026, 9:03 AM
கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட மனைவி - காவல்துறை தீவிர விசாரணை

ஷா ஆலம், மார்ச் 16 - செராஸ், ஸ்ரீ சபா பிளாட் குடியிருப்பில் வசிக்கும் 34 வயதுடைய இல்லத்தரசி ஒருவர், தனது கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு மிகவும் பிடித்தமான 'அயாம் கெப்புக்' (Ayam Gepuk) உணவை வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் வெளியிட்ட செராஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் முகமட் ரோஸ்டி டாட், கடந்த புதன்கிழமை இரவு 9.03 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து தங்களுக்குப் புகார் வந்ததாகத் தெரிவித்தார்.

அன்று மாலை சுமார் 3.30 மணியளவில் தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தான் ஆசைப்பட்ட உணவைக் கேட்டதற்காக அந்தப் பெண்ணை அவரது கணவன் மிக மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு வன்முறையிலும் இறங்கியுள்ளார்.

ஆத்திரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த கணவன், தனது மனைவியின் கழுத்தை நெரித்ததுடன், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு, தலையிலும் பலமாகத் தாக்கியுள்ளதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் கழுத்தின் வலது புறத்தில் காயமடைந்த அந்தப் பெண், சிகிச்சைக்காகத் துங்கு முகிரிஸ் மருத்துவமனையில் (HCTM) அனுமதிக்கப்பட்டார். தற்போது இச்சம்பவம் குறித்துக் காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகமட் ரோஸ்டி டாட் உறுதி அளித்துள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.