ஷா ஆலாம், செப். 7: கோலா திரங்கானு, ஜாலான் கோங் படாக்கில் உள்ள டேசா முதியாரா பகுதியில் மனைவியைத் தாக்கி வீட்டுக்குள் அடைத்து வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகக் கோலா திரங்கானு மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
தன்னை கணவர் தாக்கியதுடன், வீட்டுக்குள் அடைத்து வைத்திருப்பதாகப் பெண் ஒருவர் தொலைபேசி மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோங் படாக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டுக்குள் சிக்கியிருந்த அப்பெண்ணையும் அவரது நான்கு பிள்ளைகளையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
மருத்துவப் பரிசோதனையில், அந்தப் பெண்ணின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டிருந்ததுடன், தலை மற்றும் இடது முழங்காலில் வலி இருப்பதாகவும் அஸ்லி தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் பொறாமை காரணமாக அப்பெண்ணைத் தாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபர் காவல்துறையிடம் சரணடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் கோங் படாக் காவல் நிலையத்துக்கு வந்த அந்த 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான மூன்று முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது விசராணையில் தெரியவந்தது.
சந்தேக நபர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 324 மற்றும் 326A பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.







