நீலாய், அக்.16 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) அரசு குடியிருப்பில் (quarters) நேற்று இரவு கணவரால் கொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35 வயது பெண்ணின் மரணம், அவரது குடும்பத்தினரைப் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நோர்ஹஸ்வாணி இப்ராஹிமின் மூத்த சகோதரர் அம்ரான் இப்ராஹிம் (59), தமது இளைய சகோதரர் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் தொலைபேசி வாயிலாகத் தகவல் தெரிவித்ததாகக் கூறினார்.
நோர்ஹஸ்வாணியை அவரது கணவர் கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில், பின்னர் கணவர் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் அம்ரான் தெரிவித்தார்.
சிலாங்கூர், பிங்கிரான் பத்து கேவ்ஸில் உள்ள தமது வீட்டில் இருந்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

குடும்பத்தினரால் அன்புடன் ‘வாணி’ அல்லது ‘மோக் சூ’ என அழைக்கப்பட்ட நோர்ஹஸ்வானி, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் குணம் கொண்டவர் என்றும், அனைவரிடமும் அன்பாகப் பழகியதால் பலராலும் விரும்பப்பட்டவர் என்றும் அம்ரான் நினைவுகூர்ந்தார்.
தமது தங்கையை இறுதியாக ஏழு மாதங்களுக்கு முன்புதான் நேரில் சந்தித்ததாகக் கூறிய அவர், அதற்குப் பின்னரும் குடும்பத்தினருக்கான வாட்ஸ்அப் குழுவின் வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகத் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள்கூட குடும்பத்தில் எவ்வித பிரச்சனையும் தென்படவில்லை என அவர் கூறினார்.
“நேற்று எங்களது எட்டாவது உடன்பிறப்பு வாணியின் வீட்டுக்குச் சென்றிருந்தார். அவருக்குச் சில வேலைகள் இருந்ததால் அங்கேயே இரவு தங்கியிருந்தார்.
“அவர் வாணியிடம் தனது திருமண வாழ்க்கையை நன்றாகக் கவனித்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார். எல்லாமே வழக்கம்போலத்தான் இருந்தன. இப்படியொரு சம்பவம் நிகழும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை,” என்றார் அம்ரான்.
நோர்ஹஸ்வாணிக்கு ஆறு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாயை இழந்துள்ள அந்த இரு சிறார்களின் எதிர்காலம் குறித்தும் இச்சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சந்தேக நபர் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, சம்பவம் நிகழ்வதற்குச் சில நாட்களுக்கு முன்னரே விடுதலையானதாகத் தகவல்கள் தெரிவிப்பதாக அம்ரான் கூறினார்.
மேலும், கணவன், மனைவி இருவரும் விவாகரத்துப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது. இருப்பினும், இவ்விவகாரம் தொடர்பான மேல் விவரங்கள் விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
நோர்ஹஸ்வானியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக நாளை சிரம்பானில் உள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிசோதனை முடிந்த பின்னர், அவரது உடல் இறுதிச்சடங்கிற்காகக் கிளந்தான் மாநிலம், தும்பாட், பெங்காலான் கூபூருக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.
இதற்கிடையில், நோர்ஹஸ்வாணி முன்னதாகச் சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றியதாகவும், பின்னர் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS-க்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததாகவும் நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ அல் ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.
சந்தேக நபர் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீலாய் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜோஹாரி யாஹ்யா கூறினார்.
மேலும், இக்கொலைச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.







