மாலே, செப்டம்பர் 15 — மாலத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு இன்று மாலே நகரில் அரசு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு அவரை மாலத்தீவு அதிபர் முகமது முய்சு நேரில் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, உள்ளூர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலாச்சார நிகழ்ச்சியும் பிரதமர் அன்வாருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் பிரதமர் அன்வாரும் அதிபர் முகமது முய்சுவும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்பின்போது, மலேசியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக கலந்துரையாடினர்.
மேலும், இரு தலைவர்களின் முன்னிலையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளன.
மலேசியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே 1968ஆம் ஆண்டு தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன் பின்னர், இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன.
பிரதமர் அன்வாரின் மாலத்தீவு பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.







