ஷா ஆலாம், செப்.15 — மலேசியா முழுவதும் இந்த ஆண்டு காடுகள், புதர்கள் மற்றும் நிலங்களில் ஏற்படும் தீ சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.
ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் 20,927 தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள தீ சம்பவங்களின் எண்ணிக்கை, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கைக்கு நிகராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
நீடித்த வறட்சியான காலநிலை மற்றும் திறந்தவெளியில் தீ மூட்டும் நடவடிக்கை ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 87 தீ சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இதனிடையே, நாடு முழுவதும் திறந்தவெளியில் தீ மூட்டப்படும் 183 அபாயப் பகுதிகளை JBPM அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட நேரம் தேவைப்படுவதுடன், நடவடிக்கையில் ஈடுபடும் தீயணைப்பு வீரர்களின் உடல்நிலையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நோர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
எனவே, காட்டுத் தீ மற்றும் திறந்தவெளி தீ மூட்டல்களைத் தடுப்பதில் பொதுமக்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
குறிப்பாக வறட்சியான காலங்களில் தேவையற்ற முறையில் தீ மூட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.







