கோலாலம்பூர், ஆகஸ்ட் 30: சீனா மற்றும் நேபாளத்தில் உள்ள 91 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.
இதில், சீனாவில் 36 மலேசியர்களையும், நேபாளத்தில் மேலும் 55 மலேசியர்களையும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களின் பாதுகாப்பு மற்றும் தற்போது எங்கிருக்கின்றனர் என்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் ஏற்கனவே காத்மாண்டுவைச் சென்றடைந்துள்ளர். அவர்களுக்கு மலேசியத் தூதரகம் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்தது.
இதனிடையே, புத்ராஜெயாவில் உள்ள விஸ்மா புத்ராவின் 24 மணி நேர செயல்பாட்டு அறை தொடர்ந்து இயங்கி வருகிறது.
தொடர்புகொள்ள முடியாத மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உதவுவதுடன், சம்பந்தப்பட்ட தகவல்களை ஒருங்கிணைக்கும் பணியையும் இந்த செயல்பாட்டு அறை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், பொதுமக்கள் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதையோ அல்லது இச்சம்பவம் தொடர்பாக ஊகங்களை வெளியிடுவதையோ தவிர்க்குமாறு விஸ்மா புத்ரா கேட்டுக்கொண்டுள்ளது.







