ஷா ஆலாம், செப். 13 — கோலா லங்காட் மாவட்ட மக்களுக்கான பொது சேவைகளையும் வசதிகளையும் மேலும் மேம்படுத்த மூன்று முக்கியத் திட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த மூன்று திட்டங்களில், தெருவிலங்கு மேலாண்மை மையத்தை உருவாக்குதல், ஜாலான் செர்டாங் பெலா தகன நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் பந்திங்கில் உள்ள ஜாலான் செந்தோசா பேருந்து முனையத்தை நவீனப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
தெருவிலங்குகள் மேலாண்மை மையத்தின் மூலம், கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் விலங்குகளைப் பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.பி.கே.எல். தெரிவித்துள்ளது.
இதில் தெருவிலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், அவற்றின் நலனைப் பாதுகாத்தல் உள்ளிட்ட அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஜாலான் செர்டாங் பெலா தகன நிலையத்தையும் மேம்படுத்த எம்.பி.கே.எல். கவனம் செலுத்தி வருகிறது.
இதன் மூலம் தகனச் சேவைகள் மேலும் சீரான முறையிலும், வசதியான சூழலிலும் வழங்கப்படுவதை உறுதி செய்யப்படும்.
இதனிடையே, மக்களின் அன்றாடப் போக்குவரத்து தேவைகளுக்கு முக்கிய பங்காற்றி வரும் பந்திங் ஜாலான் செந்தோசா பேருந்து முனையமும் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்த முனையத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகள், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கு மேலும் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோலா லங்காட் சமூகத்தினருக்கான பொது வசதிகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக எம்.பி.கே.எல். தெரிவித்துள்ளது.







