புக்கிட் சாங்காங் வடிகாலில் கருநிற நீர்; மறுசுழற்சி மையத்தில் சோதனை

20 அக்டோபர் 2026, 4:19 AM
புக்கிட் சாங்காங் வடிகாலில் கருநிற நீர்; மறுசுழற்சி மையத்தில் சோதனை

ஷா ஆலம், அக். 20 – சுங்கை லங்காட் ஆற்றுக்குச் செல்லும் வடிகாலில் கருநிற நீர் காணப்பட்டதாகப் பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, கம்போங் ஆர்டிபி புக்கிட் சாங்காங்கில் உள்ள மறுசுழற்சி மையத்தில் கோலா லங்காட் நகராட்சி மன்றமும் (MPKL), சுற்றுச்சூழல் துறையும் (JAS) இணைந்து சோதனை மேற்கொண்டன.

ஜாலான் 2 ஆர்டிபி பகுதியில் அமைந்துள்ள அந்த மையத்தில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை (JPSPKP) மேற்கொண்ட ஆய்வில், மறுசுழற்சிக்காகப் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவது கண்டறியப்பட்டது.

அதேவேளையில், அப்பகுதியில் உணவுக் கழிவுகள் கொட்டப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்பட்டதாகக் கோலா லங்காட் நகராட்சி மன்றம் தெரிவித்தது.

மேலும், வளாகத்தின் உட்பகுதி, வெளிப்பகுதி மற்றும் பின்புறம் ஆகிய இடங்களில் மண் மற்றும் நீர் மாசடைந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டதாகவும், அங்கு பழுப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் கூடிய நீர் காணப்பட்டதாகவும் நகராட்சி மன்றம் குறிப்பிட்டது.

எனினும், புகாரில் குறிப்பிடப்பட்ட மாசுபாட்டுக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சுற்றுச்சூழல் துறை சேகரித்த நீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் கிடைத்த பின்னரே இதுகுறித்து உறுதியான முடிவுக்கு வர முடியும் என நகராட்சி மன்றம் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட மையத்திற்கு எதிராக MDKL கழிவு சேகரிப்பு, அகற்றுதல் மற்றும் அப்புறப்படுத்துதல் துணைச் சட்டங்கள், 2007'-இன் துணைச் சட்டம் 11-இன் கீழ் 2 அறிவிப்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்றுவதுடன், சம்பந்தப்பட்ட இடங்களைத் தாமதமின்றிச் சுத்தம் செய்யுமாறும் அந்த மையத்தின் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

உரிமம் இன்றி வணிக நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு பயன்படுத்தப்பட்ட ஃபோர்க்லிஃப்ட் வாகனம் ஒன்றையும் நகராட்சி மன்றம் பறிமுதல் செய்தது.

மறுபுறம், சுற்றுச்சூழல் துறை சம்பந்தப்பட்ட வளாகத்திற்கு எதிராக ‘Field Citation’ எனப்படும் கள அமலாக்க அறிவிப்பை வெளியிட்டதுடன், மேல் ஆய்வுகளுக்காக நீர் மாதிரிகளையும் சேகரித்தது.

மையத்தின் முன்பகுதியில் தடுப்புக் கயிறுகளும் பொருத்தப்பட்டன. இதனிடையே, விசாரணைக்கு உதவ வளாகத்தின் உரிமையாளரும் குத்தகைதாரரும் சுற்றுச்சூழல் துறையின் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டதாக நகராட்சி மன்றம் தெரிவித்தது.

தமது நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் வணிக வளாகங்கள், தங்களது நடவடிக்கைகளால் மண் மற்றும் நீர் மாசுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனக் கோலா லங்காட் நகராட்சி மன்றம் வலியுறுத்தியது.

குறிப்பாக, கழிவுகளை வடிகால்களில் வெளியேற்றுவது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அது நினைவூட்டியது.

நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் தரப்பினருக்கு எதிராக உரிய அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகராட்சி மன்றம் எச்சரித்துள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.