சுற்றுச்சூழல் துறை பெயரில் மோசடி; இரு நிறுவனங்களுக்கு RM200,000க்கும் மேல் இழப்பு

12 செப்டெம்பர் 2026, 2:32 AM
சுற்றுச்சூழல் துறை பெயரில் மோசடி; இரு நிறுவனங்களுக்கு RM200,000க்கும் மேல் இழப்பு

கோலாலம்பூர், செப். 12: கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறையின் பெயரைப் பயன்படுத்தி, அரசாங்கக் கொள்முதல் ஆவணங்கள் தொடர்பாக மோசடி நடவடிக்கைகளில் சில தரப்பினர் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இதுபோன்ற எட்டு மோசடி சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை இயக்குநர் ஷரிஃபா சக்கியா சயிட் சஹாப் தெரிவித்தார்.

இந்த மோசடிகளால் இரண்டு விநியோக நிறுவனங்கள் மொத்தம் RM200,000க்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

செப்டம்பர் 4ஆம் தேதி, மூழ்கல் உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர், தமது நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அரசாங்கக் கொள்முதல் ஆவணங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்காக கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறைக்கு நேரடியாக வந்தபோது இந்த மோசடி முதன்முறையாக துறையின் கவனத்துக்கு வந்ததாக ஷரிஃபா சக்கியா தெரிவித்தார்.

மேலும், செப்டம்பர் 8ஆம் தேதி, மற்றொரு விநியோக நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர், கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறையால் ஏற்பாடு செய்யப்படவிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக RM100,000க்கும் அதிகமான மதிப்புள்ள நினைவுப் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறி, அதன் உண்மைத்தன்மையை விசாரிக்க துறையை அணுகியதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை எந்தவொரு நினைவுப் பொருட்களையும் ஆர்டர் செய்யவில்லை என்பதுடன், அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான எந்தவொரு முன்பதிவையும் மேற்கொள்ளவில்லை.

மோசடிக்கு இலக்கான அந்த விநியோக நிறுவனங்கள் காவல்துறையில் புகார் செய்யுமாறு கோலாலம்பூர் சுற்றுச்சூழல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அரசாங்கத்துடன் கொள்முதல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என ஷரிஃபா சக்கியா அறிவுறுத்தியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.