கோலா திரங்கானு, ஆகஸ்ட் 26: கோலா திரங்கானுவில் கார் விற்பனை நிறுவனம் ஒன்று, தொலைபேசி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டு RM452,000 பணத்தை இழந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 50 வயதான அலுவலக ஊழியருக்கு நிறுவனத்தின் உரிமையாளர் எனக் கூறி சந்தேக நபரிடமிருந்து வாட்ஸ்அப் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனை கோலா திரங்கானு மாவட்டக் காவல் துறைத் தலைவர் துணை கமிஷனர் அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
நிறுவனத்தின் உரிமையாளர் என ஆள்மாறாட்டம் செய்த அந்நபர், நிறுவனத்தின் வங்கிக் கணக்கு விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஊழியரிடம் கூறியதுடன், அதே நாளில் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் RM452,000 பணத்தைப் பரிமாற்றம் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனை நம்பிய அவர், சந்தேக நபர் கூறியபடி பணத்தைப் பரிமாற்றம் செய்துள்ளார்.
எனினும், மறுநாள் அதே சந்தேக நபர் மீண்டும் தொடர்புகொண்டு, மேலும் RM235,000 தொகையை மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக அதிகளவிலான பணப் பரிமாற்றங்களைச் செய்யுமாறு கோரப்பட்டதால் சந்தேகமடைந்த ஊழியர், நிறுவனத்தின் உண்மையான உரிமையாளரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இதுகுறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
அப்போது, தாம் எந்தவொரு பணப் பரிமாற்றத்தையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிடவில்லை என நிறுவனத்தின் உரிமையாளர் மறுத்துள்ளார்.
இதையடுத்து தான் மோசடியில் சிக்கியதை உணர்ந்த பாதிக்கப்பட்டவர், நேற்று காலை 11.19 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்ததாக அஸ்லி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது உயர் அதிகாரி என ஆள்மாறாட்டம் செய்து, ஊழியர்களிடம் அவசரமாகப் பணப் பரிமாற்றம் செய்யுமாறு உத்தரவிடும் மோசடி முறைகள் குறித்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.







