ஷா ஆலாம், ஆகஸ்ட் 29: மோசடியில் சிக்கி பணத்தை இழந்தவர்கள் பதற்றம், அவமானம் அல்லது வருத்தத்தில் நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசடி பரிவர்த்தனை நடைபெற்ற முதல் ஒரு மணி நேரம் பணத்தை மோசடி கும்பலிடம் செல்வதைத் தடுப்பதில் மிகவும் முக்கியமானதாக அமையும் என சிலாங்கூர் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் உதவி ஆணையர் இஸ்வான் அப்துல் கரீம் தெரிவித்தார்.

மோசடிக்கு ஆளானவர்கள் விரைந்து செயல்பட்டால், சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையைத் தடுத்து நிறுத்தவும், பணம் எந்தெந்த கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதைப் பின்தொடர்ந்து கண்டறியவும் அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
மோசடிக்கு ஆளானவர்கள் தேசிய மோசடி அவசர நடவடிக்கை மையத்தை (NSRC) 997 என்ற எண்ணில் உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும்.
அதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வங்கியின் அதிகாரப்பூர்வ அவசரத் தொடர்பு எண்ணையும் உடனடியாக அழைத்து, சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்க வேண்டும் என்று இஸ்வான் அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்ட கணக்கு அல்லது பரிவர்த்தனை தொடர்பில் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வங்கியிடம் கோருவதுடன், அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக போலீஸ் புகாரும் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
நவீன மோசடி கும்பல்கள் மிகவும் திட்டமிட்ட முறையிலும் ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்புடனும் செயல்படுவதால், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்று இஸ்வான் குறிப்பிட்டார்.

தற்போதைய மோசடி கும்பல்களின் கட்டமைப்பு ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் செயல்பாட்டு முறையைப் போன்றதாக மாறியுள்ளது.
அழைப்பு மைய ஊழியர்கள், பணத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் ‘மியூல்’ கணக்கு நிர்வாகிகள், தொழில்நுட்ப மற்றும் இணையப் பிரிவினர், பணச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.
மோசடி மூலம் பெறப்படும் பணம் சொத்துகள் அல்லது கிரிப்டோகரன்சிகளாக மாற்றப்படலாம் அல்லது சட்டபூர்வமானவை போன்று தோற்றமளிக்கும் வர்த்தக நிறுவனங்கள் வழியாக நகர்த்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பணத்தை மாற்றும் இந்த முழு செயல்முறையும் சில நிமிடங்களுக்குள் நிறைவடைந்துவிடக்கூடும் என்றும் இஸ்வான் எச்சரித்தார்.
இதனிடையே, மோசடிக்கு ஆளாகுபவர்கள் வயதானவர்கள் அல்லது தொழில்நுட்ப அறிவு குறைந்தவர்கள் மட்டுமே என்ற எண்ணத்தைப் பொதுமக்கள் கைவிட வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வயது, கல்வித் தகுதி அல்லது சமூகப் பொருளாதார பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யாரையும் மோசடி கும்பல்களால் இலக்காகக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் தொடர்ந்து மோசடிக்கு இரையாகி வருகின்றனர்.
மோசடி கும்பல்கள் இவர்களிடம் கணிசமான சேமிப்பு அல்லது எதிர்காலத்துக்கான நிதி இருப்பதாகக் கருதி அவர்களை இலக்காகக் கொள்வதாகவும் அவர் விளக்கினார்.

போலி முதலீட்டுத் திட்டங்கள், இணையவழி வர்த்தக மோசடிகள், தொலைபேசி மோசடிகள், போலி கடன் சலுகைகள், காதல் மோசடிகள் மற்றும் மின்னணு நிதி மோசடிகள் ஆகியவை அடிக்கடி பதிவாகும் மோசடி வகைகளில் அடங்கும் என்று இஸ்வான் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலைகளைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், குரல் நகலாக்கம் (voice cloning), ‘டீப்ஃபேக்’ காணொளிகள் மற்றும் அழைப்பாளர் அடையாளத்தைப் போலியாகக் காட்டும் தொழில்நுட்பம் (caller ID spoofing) போன்ற நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் அல்லது பிற நம்பகமான நபர்களைப் போன்று நடிக்கும் மோசடிக்காரர்களின் போலி அடையாளங்கள் மேலும் நம்பத்தகுந்தவையாகக் காட்டப்படுகின்றன என்றார்.
மோசடிகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் ‘3S’ கொள்கையான ‘Semak, Sekat, Sahkan’ – சரிபார்க்கவும், தடுக்கவும், உறுதிப்படுத்தவும் என்ற நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று இஸ்வான் வலியுறுத்தினார்.
சந்தேகத்திற்குரிய இணையதளங்கள், செயலிகள் மற்றும் வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் முதலில் சரிபார்க்க வேண்டும். இதற்காக மலேசிய அரச மலேசியக் காவல்துறை (PDRM) வழங்கும் ‘Semak Mule’ வசதியையும் பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகள் மற்றும் எண்களை உடனடியாகத் தடுக்க வேண்டும். மேலும், தெரியாத நபர்கள் மூலம் அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை கிளிக் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசு நிறுவனங்கள், வங்கிகள் அல்லது அமலாக்கத் துறைகளிலிருந்து அழைப்பதாகக் கூறுபவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால், அவர்கள் வழங்கும் தகவல்களை உடனடியாக நம்பிவிடக்கூடாது.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு அழைப்பின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

அதேவேளை, தனிப்பட்ட அடையாள மற்றும் வங்கி ரகசியத் தகவல்களான PIN எண், கடவுச்சொல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) போன்றவற்றை யாரிடமும் கொடுக்கக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.
தங்களது வங்கிக் கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், அந்தக் கணக்குகள் மோசடி கும்பல்களால் ‘மியூல் கணக்குகளாக’ பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மோசடிக்கு இரையாகிவிட்டவர்கள் வெட்கம், பயம் அல்லது வருத்தம் காரணமாக நடவடிக்கை எடுப்பதைத் தாமதிக்கக் கூடாது.
மோசடி நடந்தவுடன் உடனடியாக செயல்படுவதே பணத்தை மீட்பதற்கும், மோசடி கும்பலின் அடுத்தகட்ட நடவடிக்கையைத் தடுப்பதற்கும் மிக முக்கியமானதாகும் என்று இஸ்வான் வலியுறுத்தினார்.






