கோலாலம்பூர், ஜூன் 22 - வெளிநாடுகளில், குறிப்பாகச் சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள 'ஸ்கிம் பெங்கெம்பாரா' (Skim Pengembara) திட்டம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அது சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மனிதவள அமைச்சு (KESUMA) மற்றும் பெர்கேசோ (Perkeso) ஆகியவை இணைந்து இந்தத் திட்டம் குறித்த முன்மொழிவு அறிக்கையைத் தயாரித்து முடித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியைப் பெறும் செயல்முறைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடைந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பதாக மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
மக்களவை (Dewan Rakyat) மற்றும் மேலவை (Dewan Negara) ஆகிய இரண்டிலும் ஒப்புதல் பெற்ற பிறகு, வாழ்வாதாரத்திற்காக ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே தினமும் வேலை நிமித்தம் பயணம் செய்யும் மக்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய இத்திட்டம் மிக விரைவில் அமல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
அனைத்து நடைமுறைகளும் வெற்றிகரமாக முடிந்தவுடன், பெர்கேசோ அமைப்பு இத்திட்டத்தை உடனடியாகத் தொடங்குவதற்கு முழு அளவில் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.
ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இடையே தினமும் வேலைக்காகப் பயணிக்கும் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் மலேசியத் தொழிலாளர்களுக்கு இந்த 'ஸ்கிம் பெங்கெம்பாரா' திட்டம் முறையான சமூகப் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







