புத்ராஜெயா, ஜூன் 16 – மலேசியாவின் உள்நாட்டு சுற்றுலாத் துறை கடந்த 2025ஆம் ஆண்டில் மிகவும் சாதகமான மற்றும் ஊக்கமளிக்கும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
உள்நாட்டுப் பயணிகளின் ஒட்டுமொத்தச் செலவினம் 13.6 விழுக்காடு அதிகரித்து, 121.3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என மலேசியப் புள்ளியியல் துறை (DOSM) தெரிவித்துள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தச் செலவின மதிப்பு 106.7 பில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியத் தலைமைப் புள்ளியியல் அதிகாரி டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் வெளியிட்டுள்ள 'மலேசிய உள்நாட்டுச் சுற்றுலா ஆய்வு 2025' (DTS) அறிக்கையின்படி, தங்கிப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் (Tourists) மற்றும் ஒரே நாளில் திரும்பிவிடும் தினசரிப் பயணிகள் (Excursionists) ஆகிய இரு தரப்பினரின் செலவினங்களும் முறையே 14.6 விழுக்காடு மற்றும் 12.2 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்து இந்த வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளன. இதில் தங்கிப் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்பு மட்டும் ஒட்டுமொத்த வருவாயில் 59.5 விழுக்காடாகும்.
இந்த நேர்மறைப் போக்கிற்கு ஏற்ப, உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் 2024ஆம் ஆண்டின் 260.1 மில்லியன் என்ற எண்ணிக்கையிலிருந்து கடந்த ஆண்டில் 11.5 விழுக்காடு அதிகரித்து 290.1 மில்லியன் மக்களாக உயர்ந்துள்ளது.
"சுற்றுலாப் பயணிகள் தங்கிப் பயணிக்கும் சராசரி நாட்களின் எண்ணிக்கையும் 2.49 இரவுகளில் இருந்து 2.56 இரவுகளாக அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு மக்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று நீண்ட நாட்கள் தங்கி மகிழ்வதில் காட்டும் அதிக ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது," என்று அவர் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சீனப் புத்தாண்டு, ஹரிராயா ஐடில்பித்ரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்கள், பொது விடுமுறைகள் மற்றும் பள்ளி விடுமுறைகளின் போது பயணங்களுக்கான தேவை அதிகரித்ததே உள்நாட்டுச் சுற்றுலாவின் இந்த வலுவான செயல்திறனுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
இதுதவிர, பல்வேறு மாநில அரசுகள் முன்னெடுத்த 'மாநிலச் சுற்றுலா ஆண்டு' (Tahun Melawat Negeri) பிரச்சாரங்கள், மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களையும் உள்ளூர் செலவினங்களையும் பெருமளவில் தூண்டியுள்ளன.
மேலும், சபாவின் 'பெஸ்தா காமதான்' (Pesta Kaamatan), சரவாக்கின் 'ஹரி காவாய் டாயாக்' (Gawai Dayak) போன்ற பாரம்பரியக் கலாச்சார விழாக்கள் பெருமளவிலான பயணிகளை ஈர்த்து, சுற்றுலா சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பங்களித்துள்ளன.
அதோடு, பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிகள் (Concerts), திருவிழாக்கள், கண்காட்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் ஆண்டு முழுவதும் உள்நாட்டுப் பயணங்களை ஊக்குவித்துள்ளன. அதே வேளையில், மலேசியா சில ஆசியான் (ASEAN) கூட்டங்களையும் அது சார்ந்த நிகழ்ச்சிகளையும் நடத்தியதன் மூலம், வணிக ரீதியான பயணங்கள் மற்றும் நிகழ்வு சார்ந்த சுற்றுலாச் சேவைகளும் நாடு முழுவதும் அதிகரித்தன.
பயண முறைகளின் அடிப்படையில் உள்நாட்டுப் பயணிகளில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 97.5 விழுக்காட்டினர், தரைவழிப் போக்குவரத்தையே (Land Transport) பெரிதும் நம்பியுள்ளனர். தங்கும் இடங்களைப் பொறுத்தவரை, 56.2 விழுக்காட்டுடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளே பயணிகளின் முதன்மைத் தேர்வாக நீடிக்கிறது.
இருப்பினும், கட்டணம் செலுத்தி தங்கும் விடுதிகளின் பயன்பாடும் 2024-இன் 39.6 விழுக்காட்டிலிருந்து கடந்த ஆண்டில் 43.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது; இதில் 23.1 விழுக்காட்டுடன் தங்கும் விடுதிகள் (Hotels) முதலிடத்தைப் பிடித்துள்ளன.
பிரபலமான சுற்றுலா இடங்களின் வரிசையில், கடந்த ஆண்டும் சிலாங்கூர் மாநிலமே 36.4 மில்லியன் பயணிகளுடன் மலேசியர்களின் ஆகச் சிறந்த தேர்வாக முதலிடத்தில் நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் 35.1 மில்லியன் பயணிகளுடன் இரண்டாவது இடத்தையும், பேராக் மாநிலம் 23.6 மில்லியன் பயணிகளுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக, 2025ஆம் ஆண்டில் மலேசியாவின் உள்நாட்டுச் சுற்றுலாத் துறை பயணிகளின் எண்ணிக்கை, செலவினங்கள் மற்றும் தங்கும் காலம் ஆகியவற்றில் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பதிவு செய்து, உள்ளூர் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்துவதில் தனது முக்கியப் பங்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் சுட்டிக்காட்டியுள்ளார்.







