மலேசியா - ரஷ்யா இடையே விசா இல்லா பயணம், நேரடி விமான சேவையைத் துவங்க திட்டம்

19 ஜூன் 2026, 3:05 AM
மலேசியா - ரஷ்யா இடையே விசா இல்லா பயணம், நேரடி விமான சேவையைத் துவங்க திட்டம்

கசான், ஜூன் 19 - மலேசியாவிற்கு வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்கும் நோக்கில், இருநாடுகளுக்கும் இடையிலான விசா இல்லா பயணம் மற்றும் நேரடி விமானச் சேவைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவுடன் நல்லுறவைக் கொண்டுள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவிற்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்பொழுது மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் கவலை தெரிவித்தார்.

துருக்கி நாட்டிற்கு ஆண்டுதோறும் 50 லட்சம் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும், தாய்லாந்திற்கு 20 லட்சம் பயணிகளும் செல்கின்றனர் என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அந்நாடுகளுடன் ஒப்பிடும் போது, மலேசியாவிற்கு வெறும் ஒரு லட்சம் ரஷ்ய பயணிகள் மட்டுமே வருவது ஏன் என்ற கேள்வியை அவர் எழுப்பினார். இதற்குக் காரணங்களாக, இருநாடுகளுக்கு இடையிலான விமானச் சேவைப் பற்றாக்குறை, பணம் செலுத்தும் முறைகளில் உள்ள சிக்கல்கள் ஆகியவற்றை அவர் விவரித்தார்.

நாம் இன்னும் பழமையான நடைமுறைகளிலேயே தேங்கிப் போயிருப்பதும், நமது சில முடிவுகளுக்கு மற்ற நாடுகள் எதிர்வினையாற்றுமோ என்ற தேவையற்ற அச்சம் கொண்டுள்ளதும் தான் இந்தத் தொய்வு நிலைமைக்குக் காரணம் என்று அவர் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.

இத்தகைய தேவையற்ற அச்சங்களும் கட்டுப்பாடுகளும் ஈரான் உள்ளிட்ட பிற நாடுகளுடனான உறவுகளையும் பாதிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் அன்வார், சில குறிப்பிட்ட நாடுகளின் எதிர்மறையான பார்வையைப் பற்றிய கவலைகளால் நமது நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் முடக்கப்படக் கூடாது என்றும், இவற்றுக்கு அப்பாற்பட்டு மலேசியா துணிச்சலாக முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.