கோலாலம்பூர், 13 ஜூலை – சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு இன்று இஸ்தானா நெகாராவில் (Istana Negara) அதிகாரப்பூர்வ அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது.
செப்டம்பர் 2023-இல் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு மலேசியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
இன்று காலை 10 மணியளவில் இஸ்தானா நெகாராவிற்கு வருகை தந்த அதிபர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும் அவரது மனைவி ஜேன் இட்டோகி சண்முகரத்தினம் ஆகியோரை மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசி ராஜா ஜாரித் சோபியா ஆகியோர் வரவேற்றனர்.
மாமன்னரின் அழைப்பின் பேரில் மலேசியா வந்துள்ள அதிபர் தர்மனின் இந்த அரசுமுறைப் பயணம் எதிர்வரும் ஜூலை 15 வரை நீடிக்கும்.
கடந்த 2024 மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்திற்குப் பதிலளிக்கும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது. இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையே உள்ள நெருக்கமான மற்றும் நீண்டகால இருதரப்பு உறவை மீண்டும் பிரதிபலிக்கிறது.
உலகளவில் மலேசியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், ஆசியான் (ASEAN) நாடுகளுக்குள் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் சிங்கப்பூர் தொடர்ந்து திகழ்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மலேசியா-சிங்கப்பூர் வர்த்தகம் இந்த ஆண்டும் தொடர்ந்து வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் 165.93 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், இந்த 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 14.5 விழுக்காடு அதிகரித்து 189.9 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.







