குவாலா லங்காட், செப் 8 - குவலா லங்காட்டில் உள்ள NSIP எனப்படும் NCT விவேக தொழிற்துறைப் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
அத்தொழிற்துறைப் பகுதியில் விரைவில் செயல்படவிருக்கும் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் சாவியைப் பெற்றிருப்பதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.
" சாவியைப் பெற்ற 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் விரைவில் செயல்படவிருக்கின்றனன. அதோடு, NCT விவேக தொழிற்துறைப் பூங்காவின் இரண்டாம் கட்டத்தை நாங்கள் கடந்த நவம்பரில் தொடங்கி விட்டோம்.
அந்த இரண்டாம் கட்டத் திட்டம் , திட்டமிடல் நடவடிக்கையை மேற்கொள்ள ஊராட்சி தரப்பிடமிருந்து அனுமதியைப் பெற்றுவிட்டது " என அமிரூடின் ஷாரி கூறினார்.

NCT விவேகத் தொழிற்துறைப் பூங்கா, IDRISS எனப்படும் 'தென் சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் முதல் கட்டத் திட்டமாகும்.
முன்னதாக, அமிருடின் ஷாரி, NCT விவேக தொழிற்துறைப் பூங்காவில் செயல்படவிருக்கும் தொழிற்சாலைகளுக்கு சாவிகளை வழங்கியதோடு, அப்பூங்காவின் இரண்டாம் கட்ட மேம்பாட்டுத் திட்டத்தையும் தொடக்கி வைத்தார்.
அந்நிகழ்ச்சியில் முதலீட்டுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ங் சீ ஹன் -னும், சிலாங்கூர் மாநில அரசாங்க துணைச் செயலாளர் டத்தோ ஜொஹாரி அனுவாரும் கலந்துக் கொண்டனர்.
இதே நிகழ்ச்சியில், NCT அல்லாயன்ஸ் , சிரிம் நிறுவனம், MDEC - மலேசிய டிஜிட்டல் பொருளாதார கழகம் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு உடன்பாடு பரிமாறிக் கொள்ளப்பட்டது.
"குவாலா லங்காட் தஞ்சோங் டுவா பெலாஸில் அமைந்துள்ள NSIP, 5G தொழில்நுட்ப வசதியையும் , பசுமைச் சான்றிதழையும் பெற்ற மலேசியாவின் ஒருங்கே நிர்வகிக்கப்பட்ட முதலாவது தொழில்துறைப் பூங்காவாகும்.
இத்தொழிற்துறைப் பூங்கா, IDRISS திட்டத்தின் கீழ் 910 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது.
"NSIP இன் சுற்றுச்சூழல் அமைப்பு, ஸ்மார்ட் கமாண்ட் சென்டர் (Smart Command Center) எனப்படும் அதிநவீன கட்டுப்பாட்டு அறை, அறிவார்ந்த கட்டிட நிர்வாக அமைப்பு (Smart Building Management System) மற்றும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தீர்வுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும், இங்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் தொழிலாளர்களுக்கான மையப்படுத்தப்பட்ட குடியிருப்பு வசதியும் அமைக்கப்படவுள்ளது.









