காஜாங், ஆகஸ்ட் 31: சிலாங்கூர் மாநில அளவிலான 69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம் இன்று இரவு காஜாங் அரங்கில் 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது.
பல்வேறு இனங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மாலை 5 மணி முதலே திரளத் தொடங்கினர்.

“Malaysia MADANI: Kesejahteraan Dinikmati” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில், உள்நாட்டு கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், அணிவகுப்பு, சீருடைப் படையினரின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் அவரது துணைவியார் டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முகமட்டும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டின் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 69 அணிகளின் பிரமாண்ட அணிவகுப்பு மற்றும் பேரணி இடம்பெற்றது.
இதில் பல்வேறு அரசாங்க நிறுவனங்கள், மாநில மற்றும் மாவட்டத் துறைகள், சட்டரீதியான அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சீருடைப் படைகள் பங்கேற்றன.
நள்ளிரவை நெருங்கும் வேளையில், சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தலைமையில் “மெர்டேக்கா!” முழக்கம் எழுப்பப்பட்டு, அதன் பின்னர் வாணவேடிக்கை நிகழ்ச்சி தேசிய தினக் கொண்டாட்டத்தின் உச்சக்கட்ட நிகழ்வாக இடம்பெற திட்டமிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அணிவகுப்பில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கான பரிசுகள் வழங்கப்படுவதுடன், கண்கவர் ஒளிக்காட்சி நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இக்கொண்டாட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக, சிலாங்கூர் மாநிலத்தின் சுதந்திரப் போராட்டத்தில் பங்களித்தவர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.







