ஷா ஆலம், ஆகஸ்ட் 7 - RS-2 இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் 'அன்பான, வாழத் தகுந்த மாநிலம்' எனும் மூன்றாவது உத்தியின் கீழ், மாநில அரசாங்கம் 'மனநல ஆரோக்கியத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் செலுத்தும்.
அவசர உதவி எண்கள் (Hotline), விழிப்புணர்வு இயக்கங்கள், சமூகம் சார்ந்த உளவியல் சமூக ஆதரவு சேவைகள் மூலம் மக்களின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சிகள் அதிகரிக்கப்படுமென மெந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி தெரிவித்தார்.
தொற்றா நாட்பட்ட நோய்கள் மற்றும் முதுமை தொடர்பான பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், 'சிலாங்கூர் சாரிங்' (Selangor Saring) மற்றும் முதியோர் சுகாதாரப் பரிசோதனை திட்டங்கள் மூலம், ஆரம்பக்கட்ட சுகாதாரப் பரிசோதனைகளுக்கான வாய்ப்புகளை மாநில அரசு விரிவுபடுத்தும்.
'கைராத் தருல் ஏசான்' (Khairat Darul Ehsan), 'ஸ்கிம் மெஸ்ரா' (Skim Mesra) மற்றும் 'இல்திசாம் ஏமாஸ் சிலாங்கூர்' (Iltizam Emas Selangor) ஆகியவற்றின் மூலம் முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வலுப்படுத்தப்படும்.
மேலும், 'இல்திசாம் சிலாங்கூர் சிஹாட்' (Iltizam Selangor Sihat), 'பந்துவான் சிஹாட் சிலாங்கூர்' (Bantuan Sihat Selangor), சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கான மருத்துவத் திட்டம் (Iltizam Sihat Selangor Penjawat Awam), இருதய சிகிச்சைத் திட்டம் (Skim Rawatan Jantung) மற்றும் காசநோய் (Tuberculosis/Tibi) திட்டம் ஆகியவற்றின் மூலம் B40 பிரிவினருக்கு மலிவு விலை மருத்துவ வசதிகள் விரிவுபடுத்தப்படும்.
இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றியபோது மெந்திரி பெசார் இதனைத் தெரிவித்தார்.








