சிரம்பான், செப் 5 - நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் 55 மலேசியர்களின் நெருங்கிய வாரிசுகளின் மரபணு மாதிரிகள் முழுமையாகப் பெறப்பட்டுள்ளன.
அந்த மாதிரிகள், நேபாள அதிகாரத்துவத் தரப்பின் அடையாளம் காணும் நடவடிக்கைக்காக, அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுமென வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் ஹசான் தெரிவித்தார்.
தேவை ஏற்பட்டால், நேபாள அதிகாரத்துவ தரப்புக்கு உதவ நாட்டின் இரசாயணத் துறையின் நிபுணர்களை அனுப்பி வைக்கவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே, வெளிநாடுகளின் தேடி மீட்கும் குழுவினரின் வருகையை நேபாளம் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உள்ளூர் அதிகாரிகளின் மீட்பு பணிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில், அளவுக்கதிகமான வெளிநாட்டு குழுக்கள் குவிந்திருப்பதை அந்நாடு தவிர்க்க விரும்புவதாக அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட 55 மலேசியர்களை இன்னும் தொடர்புக் கொள்ள முடியாமல் உள்ளது.







