ஷா ஆலாம்,செப் 5: நேபாளத்தில் மனிதநேயப் பணியில் ஈடுபடுவதற்காக, மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மீட்புக் குழுவைச் (SMART) சேர்ந்த 11 பேர் கொண்ட குழுவினர் இன்று அந்நாட்டிற்குப் புறப்பட்டனர்.
தகவல்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களுடன் இக்குழுவினர், காலை 9 மணியளவில் சுபாங் விமானப்படைத் தளத்திலிருந்து அரச மலேசிய விமானப்படையின் (RMAF) A400M விமானம் மூலம் புறப்பட்டனர்.
இந்தத் திட்டத்திற்கு ஸ்மார்ட் ( SMART) அமைப்பின் தளபதி அப்துல் மனாஃப் சே ஈசா தலைமை தாங்குகிறார்.
இந்த விமானப் பயணம் சுமார் ஐந்து மணி நேரம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இக்குழுவினர் 10 நாட்களுக்கு நேபாளத்தில் தேடி மீட்கும் பணியில் ஈடுபடுவர் என நட்மா ( NADMA) தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பின் தலைமை இயக்குநர் டத்தோ மியோர் இஸ்மாயில் மியோர் அகிம் தெரிவித்தார்.
ஸ்மார்ட் குழுவினரை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
" இப்போதைக்கு வெள்ளம் பாதிக்கப்பட்ட சுரங்கப் பகுதிக்கு ஸ்மார்ட் குழுவினர் செல்வார்கள் என நம்பப்படுகிறது. இந்த மனிதநேய உதவியின்போது பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் காப்பாற்றுவோம். எனினும் மலேசியர்கள் கடைசியாக இருந்த பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் " என மியோர் கூறினார்.
ஸ்மார்ட் குழுவினருடன் 31 கப்பல் மாலுமிகளும் உடன் சென்றுள்ளனர்.
அக்குழுவினர் சென்சார் கருவி, தொடர்பு கருவிகள், உயர் திறன் கொண்ட ட்ரோன்கள், சுரங்க மீட்பு நடவடிக்கைக்கான சிறப்பு சாதனங்கள், நான்கு சக்கர வாகனம், 10 டன் எடை கொண்ட டிரக் லாரி ஆகியவற்றை A400M விமானத்தில் கொண்டு சென்றுள்ளனர்.








