ஷா ஆலாம், ஆகஸ்ட் 30 - நேபாளத்தைச் சீர்குலைய வைத்திருக்கும் வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, மலேசியா, SMART எனப்படும் அதன் தேடி-மீட்கும் சிறப்பு மலேசிய பேரிடர் குழுவினரை அந்நாட்டிற்கு அனுப்பி வைக்கவுள்ளது.
அப்பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்களை அடையாளம் கண்டு தாயகம் கொண்டு வரும் முயற்சியில் அக்குழுவினர் ஈடுபடுவர். அதோடு உதவிகளை ஒருங்கிணைப்பதில் காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்துடனும் அக்குழுவினர் ஒத்துழைப்பர் எனப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
SMART குழுவினரை விரைந்து நேபாளத்திற்கு அனுப்பி வைக்க, வெளியுறவு அமைச்சின் ஒத்துழைப்புடன் தேசியப் பாதுகாப்பு மன்றமும் தேசியப் பேரிடர் நிர்வாக மன்றமும் நேபாள அரசாங்கத்துடன் ஒருங்கிணைத்துச் செயல்பட உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், வெள்ளத்துக்குப் பிந்திய மீட்பு பணிகளுக்கு ஆதரவாகவும் மலேசியா, நேபாளத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவியையும் செய்யுமெனவும் பிரதமர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
வெளிநாடுகளின் தேடி மீட்கும் உதவிகளை முன்னதாக நிராகரித்த நேபாளம், பின்னர் பாதிக்கப்பட்ட வெளிநாடுகள் கொடுத்த அரச தந்திர நெருக்குதலை அடுத்து, அதன் முடிவை மாற்றிக் கொண்டது.
தேடி மீட்கும் நடவடிக்கைகளுக்குத் தங்களிடம் போதிய மீட்புக் குழுவினர் இருப்பதால், சுரங்கப் பகுதியில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், மரபணு -தடயவியல் சோதனைகளை மேற்கொள்ளவும் தேவையான உதவிகளை தற்போதைக்கு வெளிநாடுகளில் இருந்து நேபாளம் அனுமதித்துள்ளது.
பனிப்பாறை சரிவை அடுத்து, ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட நேபாள வெள்ளப் பெருக்கில், நேற்று இரவு மணி 8 வரை 55 மலேசியர்களை இன்னும் தொடர்புக் கொள்ள முடியாமல் உள்ளது.
இதனிடையே நேபாளத்தில் அப்பேரிடரில் உயிரிழந்தோர் எண்னிக்கை 734 -ஆக அதிகரித்துள்ளது. 2,498 பேர் காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











