நேபாள வெள்ளம்: தமிழ் பேசும் ஆலோசகர்களைக் கோரும் MASFIH

3 செப்டெம்பர் 2026, 4:31 PM
நேபாள வெள்ளம்: தமிழ் பேசும் ஆலோசகர்களைக் கோரும் MASFIH

கோலாலம்பூர்: நேபாள வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு இன்னும் கண்டுபிடிக்கப்படாத மலேசியர்களின் குடும்பங்களுக்கு, திட்டமிடப்பட்டுள்ள தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் குறித்த தெளிவான தகவல்களும், மனநல ஆதரவும் தேவை என்று 'மலேசியா சொலிடாரிட்டி: பேமிலிஸ் இன் ஹோப்' ( MASFIH) அமைப்பு தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்களின் வயதான உறவினர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசாங்கம் உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள போதிலும், ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் பேசுவதற்கு சிரமப்படும் வயதான குடும்ப உறுப்பினர்களுக்குத் தமிழ் பேசும் ஆலோசகர்கள் மிகவும் அவசியம் என MASFIH அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மணிவண்ணன் ரெத்தினம் தெரிவித்தார்.

“மொழிபெயர்ப்பாளர்களை நம்பியிருப்பது ஆலோசனையின் செயல்திறனைக் குறைக்கலாம். அதற்குப் பதிலாக, இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள ஒரு தமிழ் பேசும் ஆலோசகரை நியமிப்பது குறித்து அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அர்த்தமுள்ளதாகவும் ஆதரவாகவும் அமைவதை உறுதி செய்யும்,” என்று அவர் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் உளவியல் சமூக ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக மகளிர்-குடும்ப- சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறியதைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதனிடையே, மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மீட்புக் குழுவினர் (SMART), சனிக்கிழமை நேபாளத்திற்கு புறப்படவிருப்பதை , மணிவண்ணன் வரவேற்றார்.

அதன் வழி, சம்பவ இடத்திலிருந்து மேலும் துல்லியமானத் தகவலைப் பெற முடியுமென்றாரவர்.

அதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுடன் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டுமெனவும் MASFIH எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் வழி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வேதனையை பிரதமரால் நேரடியாகக் கேட்டறிய முடியுமென அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.