ஷா ஆலாம், செப் 3: சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த அதிகமான இளைய தொழில்முனைவோர் தங்கள் வணிகத்தை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, சிலாங்கூர் இளைஞர் சமூக (SAY Aspire ) ஆஸ்பியர் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டுமென சிலாங்கூர் இளவரசர் தெங்கு அமீர் ஷா விருப்பம் தெரிவித்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், உள்ளூர் தொழில்முனைவோரின் போட்டித்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களின் தயாரிப்புகளும் முத்திரைகளும் அனைத்துலகச் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று அவர் கூறினார்.
"இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றவர்கள் தங்களின் வணிக யோசனைகள், வணிக மாதிரிகள் மற்றும் திறன்களை முன்வைத்து, தங்கள் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காகக் காட்டிய அர்ப்பணிப்பையும் துணிச்சலையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளையும், சிறந்த முறையில் போட்டியிட்டு அசாதாரணமான தொழில்முனைவோர் ஆர்வத்தை வெளிப்படுத்திய இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று சிலாங்கூர் இளவரசர் தமது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று சன்வே ரிசார்ட் தங்கும் விடுதியில் நடைபெற்ற 7-வது SAY ஆஸ்பியர் விருது வழங்கும் விழாவில், முதலிடம் பிடித்த 'RHJ Tijarah Sdn Bhd' நிறுவனத்திற்கு இளவரசர் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தார்.
தலைமை நடுவராகவும் செயல்பட்ட இளவரசர், இரண்டாம் இடம் பிடித்த ஹொக்கிடோ ஷாப் எண்டர்பிரைஸ் (Hokido Shop Enterprise), மூன்றாம் இடம் பிடித்த டட்டாவெர்ஸ் நிறுவனம் (Dataverse Sdn Bhd), நான்காம் இடம் பிடித்த நியூட்ரிவேரா மேனுஃபேக்ச்சரிங் நிறுவனம்(Nutrivera Manufacturing Sdn Bhd) மற்றும் ஐந்தாம் இடம் பிடித்த கோ அட்வான்ஸ்ட் நிறுவனம் (Go Advanced Sdn Bhd) ஆகிய நிறுவனங்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
SAY ஆஸ்பியர் என்பது ஏற்றுமதி உத்திகள் தொடர்பான வழிகாட்டுதல் வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம், தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உலகளாவிய சந்தைக்கு விரிவுபடுத்தும் திறன் கொண்ட இளைய தொழில்முனைவோரை மேம்படுத்தும் ஒரு திட்டமாகும்.
2017 முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இப்போட்டி, சிலாங்கூரில் இயங்கும் நிறுவனங்களுக்கும், 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, திவாலாகாத அல்லது கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படாத இயக்குநர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.









