கோத்தா கெமுனிங் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

10 ஜூலை 2026, 1:16 AM
கோத்தா கெமுனிங் வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவுபடுத்த சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

ஷா ஆலாம், ஜூலை 10 – கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ளப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவுபடுத்த வேண்டும் என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிராகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சுங்கை ரசாவ் பகுதியில் புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் மற்றும் வெள்ளத் தடுப்புக் குளங்களை அகலப்படுத்தும் நடவடிக்கைகள் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முக்கிய வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் தற்போது 30 முதல் 50 விழுக்காடு வரை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்த பிராகாஷ், குடியிருப்பாளர்களின் நலனைக் கருதி இத்திட்டங்கள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் எவ்விதத் தாமதமுமின்றி முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

தாம் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தொகுதி வாரியாக மேற்கொள்ளும் கள ஆய்வுகளின் போது, பொதுமக்கள் தரப்பிலிருந்து அதிகமாக முன்வைக்கப்படும் முக்கியப் புகாராக இந்த வெள்ளப் பிரச்சனையே உருவெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளப் பிரச்சினை மட்டுமின்றி, முறையாகப் பராமரிக்கப்படாத மரங்கள், சேதமடைந்த சாலைகள், உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் தூய்மைக்குறைவு போன்ற புகார்களும் அதிகளவில் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரங்களை உடனடியாக உள்ளூர் நகராண்மைக் கழகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதோடு, சம்பந்தப்பட்ட நகராண்மைக் கழகப் பிரதிநிதிகளும் நேரடியாகக் களமிறங்கிப் பணிகளை மேற்பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலவரங்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளையில், கோத்தா கெமுனிங் பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், அங்குள்ள சில முக்கியச் சாலைகளை மாநில அரசு அகலப்படுத்த வேண்டும் எனவும் பிராகாஷ் சம்புநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.