ஷா ஆலம், செப். 3: இன்று அதிகாலை ஷா ஆலாம் மற்றும் காப்பார் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு தீ விபத்துகள் ஏற்பட்டன.
முதல் தீ விபத்து ஷா ஆலாம், செக்ஷன் 32, ஜாலான் புக்கிட் கெமுனிங் டாமாய் 32/151 பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு பதப்படும் கிடங்கில் நேற்று இரவு 10.59 மணியளவில் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்துடன் 26 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் அஷ்ருல் ரியெசல் அஸ்பார் கூறினார்.
இந்தச் சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் அஷ்ருல் ரியெசல் தெரிவித்தார்.
தீ நள்ளிரவு 12.20 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், அதிகாலை 1.15 மணியளவில் தீயை அணைக்கும் பணிகள் சுமார் 80 விழுக்காடு நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.
ஷா ஆலாமில் தீயணைப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், அதிகாலை 1.04 மணியளவில் ஜாலான் பெசார் காப்பார் பகுதியில் அமைந்துள்ள மரப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக மற்றுமொரு அவசர அழைப்பு தீயணைப்பு துறைக்கு கிடைத்தது.
இந்த இரண்டாவது சம்பவத்தில் 24 தீயணைப்பு வீரர்கள் தீ அணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுமார் 1.6 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருந்த மரப் பதப்படுத்தும் தொழிற்சாலையின் சுமார் 80 விழுக்காடு பகுதி தீயினால் பாதிக்கப்பட்டதாக அஷ்ருல் ரியெசல் தெரிவித்தார்.
ஷா ஆலாம் மற்றும் காப்பார் பகுதிகளில் இடம்பெற்ற இந்த இரு தீ விபத்துகளுக்குமான காரணம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







