ஷா ஆலம், ஆகஸ்ட் 25: காற்று மாசுபாடு மற்றும் தீ விபத்து அபாயத்தைத் தவிர்க்கும் வகையில், திறந்தவெளியில் தீ மூட்டும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திறந்தவெளியில் குப்பைகளை எரிப்பதால் புகை மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், அது சுற்றுவட்டார மக்களின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.
திறந்தவெளி தீ வைப்பு சம்பவங்களை நேரில் காணும் பொதுமக்கள், சம்பவம் நடைபெற்ற இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்வதுடன், புகைப்படம் அல்லது காணொளியையும் ஆதாரமாகச் சேகரித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு சுவா கேட்டுக்கொண்டார்.
தீ கட்டுக்கடங்காமல் பரவி நிலைமை ஆபத்தானதாக மாறும் பட்சத்தில், பொதுமக்கள் உடனடியாக 999 என்ற அவசர எண்ணையோ அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையையோ தொடர்புகொள்ள வேண்டும்.
மேலும், திறந்தவெளி தீ வைப்பு தொடர்பான புகார்களை சுற்றுச்சூழல் துறையின் 03-8889 1972 என்ற தொலைபேசி எண், 1-800-88-2727 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அதேவேளை, செலாயாங் நகராண்மைக் கழகத்திடம் (MPS) புகார் அளிக்க விரும்புவோர் 03-6126 5800 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இதனிடையே, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் குப்பைகளை முறையாக அகற்றி நிர்வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.








