கோலாலம்பூர், ஜூலை 23 — மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, இன்று முதல் ஜூலை 29-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கு மானியமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்துள்ளதாக நிதியமைச்சு (MOF) தெரிவித்துள்ளது.
தானியங்கி விலை நிர்ணய முறைமை (APM) சூத்திரத்தின் அடிப்படையில், மானியமில்லா RON97 பெட்ரோல் லிட்டருக்கு 20 சென் உயர்ந்து 4.20 ரிங்கிட்டாகவும், மானியமில்லா RON95 பெட்ரோல் லிட்டருக்கு 20 சென் உயர்ந்து 3.62 ரிங்கிட்டாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, மானியமில்லா டீசல் விலை லிட்டருக்கு 35 சென் உயர்ந்து 4.42 ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தக் காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வெடித்துள்ள மோதலினால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலைகள் 16 விழுக்காடு உயர்ந்துள்ளன.
கடந்த வாரத்தில் ஏற்பட்ட இந்த உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களே மானியமில்லா பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன.
'ஹார்முஸ்' நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து கட்டுப்பாடுகளும், கப்பல்களின் வருகை குறைந்ததும் உலகளாவிய பெட்ரோலிய விநியோகத்தில் தடையை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளன.
உலகளாவிய கையிருப்பு அளவு குறைந்து வருவதும், சவூதி அரேபியாவிலிருந்து அனுப்பப்படும் எண்ணெய் விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுமே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணமாகும்.
இந்த மோதலுக்கு ஒரு இறுதித் தீர்வு எட்டப்படும் வரை உலகளாவிய பெட்ரோலியச் சந்தை தொடர்ந்து நிலையற்ற தன்மையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் போர்நிறுத்தத்திற்குமான முயற்சிகள் விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்திய போதிலும், விநியோகத் தடை குறித்த சந்தையின் கவலைகளை இவை இன்னும் முழுமையாகக் குறைக்கவில்லை.
தற்போது நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்பு போதிய அளவில் இருந்தபோதிலும், பொதுமக்கள் எரிபொருளைத் தொடர்ந்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணங்களை மிகவும் திறம்படத் திட்டமிடுவதும், அவசியமற்ற பயணங்களைக் குறைப்பதும் நாட்டின் எரிபொருள் இருப்பை நீட்டிக்க உதவுவதோடு, அரசாங்கத்தின்
விலை ஏற்ற இறக்கங்களில் இருந்து மக்களைத் தொடர்ந்து பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் எரிபொருள் விநியோகம் போதுமானதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.






