ஷா ஆலம், செப் 1 : இன்று காலை 9.55 மணி நிலவரப்படி சரவாக்கில் உள்ள ஆறு பகுதிகளில் காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு (IPU) அபாயகரமான அளவை எட்டியது.
இதில் செரியான் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD Serian) மிக அதிகபட்சமாக 408 புள்ளிகளைப் பதிவு செய்தது.
சுற்றுச்சூழல் துறையின் மலேசிய காற்றுத் தூய்மைக் கேட்டு குறியீட்டின் நிர்வகிப்பு முறையின்(APIMS) இணையப்பக்கத்தின்படி, கூச்சிங் பகுதியில் 402 புள்ளிகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து சமரஹான் (371), ஸ்ரீ அமான் (364), சரிகேய் (337) மற்றும் சிபு (315) ஆகிய பகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சரவாக்கின் மேலும் மூன்று பகுதிகள் ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையில் உள்ளன.
பிந்துலு மற்றும் முக்கா ஆகிய பகுதிகள் தலா 237 புள்ளிகளையும், சாமாலாஜு 230 புள்ளிகளையும் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், மிரி தொழில்துறை பயிற்சி நிறுவனம் (ILP Miri) 187 புள்ளிகளையும், மிரி (180), காபிட் (179) மற்றும் லிம்பாங் (166) ஆகிய பகுதிகள் ‘ஆரோக்கியமற்ற’ நிலையிலும் பதிவாகியுள்ளன.
சபாவில் லாபுவான் (167), கிமானிஸ் (158), கெனிங்காவ் (156) மற்றும் தவாவ் (128) ஆகிய பகுதிகளும் ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்துள்ளன.
சிலாங்கூரில், ஜோஹான் செத்தியா பகுதி மட்டுமே 140 புள்ளிகளுடன் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைப் பதிவு செய்த ஒரே பகுதியாகும்.
அம்மாநிலத்தின் பிற நிலையங்கள் இன்னும் மிதமான நிலையிலேயே உள்ளன. ஷா ஆலம் மற்றும் கிள்ளான் தலா 74 புள்ளிகளையும், கோலா சிலாங்கூர் மற்றும் பந்திங் (70), மற்றும் பெட்டாலிங் ஜெயா (64) புள்ளிகளையும் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக, இன்று காலை 9.55 மணி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 68 காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களின் தரவுகளை APIMS பதிவு செய்துள்ளது.
காற்றுத் தூய்மைக்கேட்டு குறியீடு(IPU) சுழியம் முதல் 50 வரை இருந்தால் நல்ல தரம், 51 முதல் 100 வரை மிதமானது, 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது மற்றும் 300-க்கும் அதிகமான புள்ளிகள் பதிவானால் அது அபாயகரமான அளவு எனக் கருதப்படுகிறது.







