கோலாலம்பூர், ஆகஸ்ட் 31: கத்தார், தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம் நேற்றிரவு ஜாலூர் கெமிலாங்கை ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்தது.
அந்நாட்டில் வசிக்கும் மலேசியர்களை தேசியப் பற்றோடு ஒன்றிணைப்பதற்காக இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை நேரடியாக இணையவழியிலும் ஒளிபரப்பியதாக மலேசியத் தூதரகம் தெரிவித்தது. இதன் மூலம் கத்தார் முழுவதும் வசிக்கும் மலேசியர்கள் நேரடியாக நிகழ்வில் பங்கேற்க முடியாத நிலையிலும் இணையவழியாக இணைந்து தேசிய தினக் கொண்டாட்டத்தை அனுபவிக்க முடிந்தது.
ஜாலூர் கெமிலாங்கை ஏற்றுவது, மலேசிய மக்களின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய அடையாளத்தை பிரதிபலிப்பதாக தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசித்து பணியாற்றும் மலேசியர்களுக்கும் இந்த தேசிய அடையாளம் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தேசிய தினக் கொண்டாட்டம் என்பது நாட்டின் வரலாற்றை நினைவுகூர்வதற்கான நிகழ்வாக மட்டுமல்லாமல், மலேசியர்களை தொடர்ந்து ஒன்றிணைக்கும் தருணமாகவும் அமைகிறது என்று கத்தாருக்கான மலேசியத் தூதுவர் ஃபைசல் ரசாலி கூறினார்.
இதனிடையே, தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மலேசியத் தூதரகம் கத்தாரில் உள்ள மலேசியர் சங்கமான Persatuan Rakyat Malaysia di Qatar (MAQ) மற்றும் அந்நாட்டில் வசிக்கும் மலேசிய சமூகத்துடன் இணைந்து ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை தொடர்ச்சியான பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது.







