ஷா ஆலம், ஆகஸ்ட் 26: ஜாலூர் கெமிலாங் சுதந்திரத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் தேசியச் சின்னமுமாகும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்-ஹாஜ் தெரிவித்தார்.
இனம், மதம், மொழி, அரசியல் நிலைப்பாடு மற்றும் சமூகப் பின்னணி என எந்த வேறுபாடும் இருந்தாலும் ஜாலூர் கெமிலாங் அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது என்பதை சுல்தான் நினைவூட்டினார்.
இதனிடையே, தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு டத்தாரான் சிலாங்கூரில் உள்ள 120 மீட்டர் உயரமான கொடிக்கம்பத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை ஜாலூர் கெமிலாங் பறக்கவிடுவதற்கு சுல்தான் முன்னதாக அனுமதி வழங்கியிருந்தார்.
அதனை முன்னிட்டு இன்று தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்துவதுடன், மக்களிடையே தேசப்பற்று மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கும் அடையாளமாகவும் அமைந்தது.
தேசிய தினத்தின் உண்மையான உணர்வு என்பது சமூகங்களை ஒன்றிணைக்கவும், மக்களிடையேயான வேறுபாடுகளைக் களையவும் தங்களது வாழ்நாளை அர்ப்பணித்தவர்களின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவற்றைப் போற்றுவதில் வெளிப்பட வேண்டும்.
அதேவேளை, வெவ்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் கலாசாரங்களைச் சேர்ந்தவர்களை மதிக்கும் பண்பை இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.
தலைவர்களும் அரசியல்வாதிகளும் மிதமான அணுகுமுறை, சகிப்புத்தன்மை மற்றும் பரிவு ஆகியவற்றைக் கடைப்பிடித்து மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
அரசியல், இனம் அல்லது மதம் சார்ந்த வேறுபாடுகளை மக்களைப் பிரிப்பதற்கான காரணமாக தலைவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் சுல்தான் அறிவுறுத்தினார்.
தேசிய தினக் கொண்டாட்டங்கள் வெறும் விழாக்களாக அமைந்துவிடாமல், பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடையே புரிந்துணர்வு, மரியாதை மற்றும் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைய வேண்டும்.







