கோலாலம்பூர், ஜூலை 18: வளைகுடா பிராந்தியத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வரும் வேளையில், கத்தாரில் வசிக்கும் மலேசியர்கள் எப்போதும் தங்களது பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கி, தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தோஹாவில் உள்ள மலேசியத் தூதரகம், தற்போதைக்குத் தங்களது தூதரகச் செயல்பாடுகள் வழக்கம்போல் தொடர்ந்து வருவதாகவும், அதே வேளையில் கத்தாரில் உள்ள மலேசியர்களின் இருப்பிடம் குறித்த விவரங்களைத் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்பப் புதுப்பித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, கத்தாரில் உள்ள மலேசியர்கள் தங்களது மற்றும் தங்களது குடும்பத்தினரின் தகவல்களை மலேசிய வெளியுறவு அமைச்சின் 'இ-கான்சுலர்' (eKonsular) அமைப்பின் வழி உடனடியாகப் புதுப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை இந்த அமைப்பில் பதிவு செய்யாதவர்கள், வெளியுறவு அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திற்குச் சென்று உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில், கத்தார் வழியாகப் பயணம் மேற்கொள்ளும் அல்லது பிற நாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் (Transit) மலேசியப் பயணிகள், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக வெளியுறவு அமைச்சின் 'மைவேர்ல்ட்அலர்ட்' (MyWorldAlert) செயலியைப் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
கத்தாரில் உள்ள மலேசியர்கள் யாருக்கேனும் தூதரகத்தின் அவசர உதவி தேவைப்பட்டால், +974 3374 6733 அல்லது +974 4483 6463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி வழியாகவும் தங்களது கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம்.






