ஷா ஆலாம், ஆகஸ்ட் 31: தோட்ட வாழ்க்கை என்பது வறுமை, கடின உழைப்பு, குறைந்த கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. எனினும், மலேசியாவின் சுதந்திரப் பயணத்தில் இணைந்து, காலவோட்டத்தில் அந்த அடையாளத்தை உடைத்தெறிந்தனர் தோட்ட மக்கள்.
அதற்கொரு முன்னுதாரணம் புலாவ் கேரியைச் சேர்ந்த சுப்ரமணியம் பொன்னுசாமியின் குடும்பக் கதை.
“கல்வியே வாழ்க்கையை மாற்றும் சக்தி" சுப்ரமணியத்தின் தாரக மந்திரமும் கூட.
புலாவ் கேரி தோட்டத்தில் பால் மரம் சீவி, அதிலிருந்து கிடைத்த ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தை வழிநடத்திய பெற்றோரின் எளிய வாழ்க்கையிலிருந்து தொடங்கியது சுப்ரமணியத்தின் வாழ்க்கை.

தற்போது மூன்று தலைமுறைகள் கடந்து கல்வியின் வழி உயர்ந்து நிற்கின்றது அவரது குடும்பம்.
சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் அரசியல் விடுதலை மட்டுமல்ல. வறுமையின் பிடியிலிருந்து விடுபடுவதும், அடுத்த தலைமுறைக்கு தங்களை விடச் சிறந்த வாழ்க்கையை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதும் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தமாகவும் விளங்குகிறது.
ஐந்து பிள்ளைகளில் ஒரே ஆண் பிள்ளையாக தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த சுப்ரமணியத்தின் வாழ்க்கைப் பயணம், பெற்றோரின் தியாகம், கல்வியின் மீதான நம்பிக்கை மற்றும் அடுத்த தலைமுறைக்காக எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகள் எவ்வாறு ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதற்கு சான்றாகவும் அமைந்துள்ளது.

அவரது பெற்றோர் மறைந்த பொன்னுசாமி நல்லதம்பியும் வள்ளியம்மா மூக்கனும் தங்களது வாழ்நாள் முழுவதும் தோட்டத்தில் கடுமையாக உழைத்தனர். மழையையும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ரப்பர் மரம் சீவி , தாங்கள் அனுபவிக்காத கல்வி வாசத்தை தங்களது பிள்ளைகளுக்குத் தந்தனர்.
அந்த ஒரு முயற்சி, இன்று மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது.
“நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன் அல்ல. ஆனால், கல்வியால் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்ற முடியும் என்று உறுதியாக நம்பிய பெற்றோர் எனக்கு இருந்தனர்,” என்று நினைவுகூர்கிறார் 65 வயதான சுப்ரமணியம் .
சுப்ரமணியம் தனது ஆரம்பக் கல்வியை புலாவ் கேரி தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். பின்னர் புலாவ் கேரி இடைநிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற வேண்டும் என்ற உறுதியுடன், புலாவ் கேரியை விட்டு நகர்ப்புறத்திற்குச் சென்று, கிள்ளான் துறைமுகத்தில் உள்ள டத்தோ ஹம்சா இடைநிலைப் பள்ளியில் தனது மேல்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார்.

எஸ்.பி.எம். தேர்வை முடித்த பின்னர், முடிவுகளுக்காகக் காத்திருந்த காலத்தை வீணடிக்காமல், குடும்பத்திற்கு உதவுவதற்காகப் புலாவ் கேரி தோட்டத்தில் அமைந்திருந்த செம்பணை தொழிற்சாலையில் தற்காலிகமாக வேலை செய்தார்.
ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் பெற்றோரின் அசைக்க முடியாத ஆதரவுடன், மின்பொறியியல் துறையில் கல்வியைத் தொடர்ந்த சுப்ரமணியம், தொழில்நுட்பத் துறையில் தனது தொழில் வாழ்க்கையை உருவாக்கினார்.
அவரது குடும்பப் பயணத்தில் 1992ஆம் ஆண்டு ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
தனது மனைவி, பெற்றோர் மற்றும் மூன்று சிறு பிள்ளைகளுடன் புலாவ் கேரியை விட்டு கிள்ளானுக்குக் குடிபெயர்ந்தார் சுப்ரமணியம். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்பையும் பிரகாசமான எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்த முடிவை எடுத்தார்.

“நகரத்திற்குக் குடிபெயர்வது எளிதான முடிவு அல்ல. ஏராளமான நினைவுகள் நிறைந்த இடத்தை நாங்கள் விட்டுச் சென்றோம். ஆனால், எனது பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக அந்தத் தியாகம் அவசியமாக இருந்தது,” என சுப்ரமணியம் கூறினார்.
அதேவேளை, அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், தோட்டப்புற சமூகங்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தொழில் மற்றும் சமூகப் பணிகளின் பல்வேறு பொறுப்புகளுக்கு மத்தியிலும், தனது பிள்ளைகளின் வளர்ப்பில் கல்வி, ஒழுக்கம் மற்றும் பணிவு ஆகியவற்றை அடிப்படை மதிப்புகளாக அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
“அறிவு நம்மை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும். ஆனால், நமது வேர்களையும், வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு உதவியவர்களையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று எனது பிள்ளைகளுக்கு எப்போதும் கூறுவேன்,” என்றார் அவர்.
சுப்ரமணியத்தின் இரண்டாவது பிள்ளையான 30 வயது ஷாருமதி, தங்களது குடும்பத்தின் முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை அமைத்தவர்கள் தனது தாத்தா, பாட்டியே என்கிறார்.
தோட்டத் தொழிலாளர்களாகக் கடுமையாக உழைத்து, தங்கள் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த தியாகமே இன்றைய தலைமுறையின் வெற்றிக்கு வழிவகுத்ததாக அவர் தெரிவித்தார்.
தாத்தா, பாட்டியிடமிருந்து பெறப்பட்ட வாழ்க்கைப் பாடங்களைத் தந்தை தங்களிடம் தொடர்ந்து விதைத்ததாக ஷாருமதி கூறினார்.

இன்று சுப்ரமணியத்தின் மூன்று பிள்ளைகளும் வெவ்வேறு தொழில்துறைகளில் தங்களுக்கென வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்கியுள்ளனர்.
மூத்த மகன் 31 வயதான ஹேமந்த்வெல், சரவாக் கடல்சார் அகாடமியில் கடல்சார் கல்வியைப் பயின்று, தற்போது Chief Mate ஆகப் பணியாற்றி வருகிறார். ஷாருமதி, நியூகாசில் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற பின்னர், வங்கித் துறையில் கண்காணிப்பு அதிகாரியாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் பெட்ரோனாஸ் நிறுவனத்தின் விசாரணை- சிறப்பு ஆய்வுப் பிரிவில் பணியாற்றிய அவர், திருமணத்திற்குப் பின்னர் ஈப்போவுக்குக் குடிபெயர்ந்தார். தற்போது அங்குள்ள ஒரு வங்கியில் வர்த்தக வங்கி வாடிக்கையாளர் உறவு மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
இளைய சகோதரரான 29 வயது தர்ஷன், ரனாக்கோ மரைன் நிறுவனத்தில் கடல்சார் பொறியியல் கல்வியை முடித்துள்ளார். தற்போது அவர் கடல்சார் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.

நகருக்கு குடிபெயர்ந்து தொழில் ரீதியாக வாழ்க்கையில் உயர்வு கண்டிருந்தாலும் , தங்களது தோட்டப் பின்னணியை மறக்காமல் உள்ளனர் இக்குடும்பத்தினர்.
இன்றும் அவர்கள் புலாவ் கேரிக்கும், தங்களது தாத்தா, பாட்டி ஒரு காலத்தில் உழைத்த தோட்டத்திற்கும் அடிக்கடி சென்று வருகின்றனர்.
இதனிடையே வெற்றி என்பது கல்வித் தகுதிகள் அல்லது தொழில் சாதனைகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. கல்வியுடன் நல்ல குணநலன்களும் ஒழுக்கமும் ஒருவரை சமூகத்தில் மதிக்கப்படக் கூடியவராக உயர்த்திக் காட்டுமென்கிறார் சுப்ரமணியம்.
“ஒருவரிடம் கல்வி இருந்தாலும், நல்லொழுக்கம் இல்லாவிட்டால் அவர் தொழிலில் வெற்றி பெறலாம். ஆனால், அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார் என்று அர்த்தமல்ல,” என்று அவர் கூறினார்.
கடந்த காலத்தில் தோட்டப் பாட்டாளிகள் இன்றைய நகர்ப்புற வாழ்க்கையை போலன்றி மிகவும் நெருக்கமான சமூக உறவுகளைக் கொண்டிருந்தனர். சமூக ஒற்றுமை அங்கு மிகவும் வலுவாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“என்னைப் போன்ற பால் மரம் வெட்டும் தொழிலாளர்களின் மகனும் கல்வி மற்றும் கடின உழைப்பின் மூலம் தனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்ற முடிந்தால், இன்னும் பல இளைஞர்களும் அதை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.
“ஏழ்மையில் பிறப்பது நமது கையில் இல்லை. ஆனால், முயற்சியாலும் கல்வியாலும் வறுமையில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்பை உருவாக்குவது நமது கைகளில் உள்ளது,” என்கிறார், மலேசியாவின் சுதந்திரக் காற்றை சுவாசித்தவாறு கூறும் சுப்ரமணியம்.







