புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 - பல்வேறு அமைச்சுகள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள், நாட்டின் தற்காப்பு பலத்தை பறைசாற்றும் சொத்துக்கள் ஆகியவற்றின் அணிவகுப்புகளுடன், மக்களின் தேசபக்தி உணர்வைத் தூண்டும் துடிப்பான கலை நிகழ்ச்சிகள் என நாளை புத்ராஜெயா சதுக்கம், 69-வது தேசிய தினக் கொண்டாட்டத்தால் களைகட்டவுள்ளது.
"மலேசியா மடானி: நல்வாழ்வை அனுபவிப்போம்" (Malaysia MADANI: Kesejahteraan Dinikmati) என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள இவ்வாண்டின் கொண்டாட்டம், நாட்டின் மீதான அன்பை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளை மட்டும் உள்ளடக்கியிருக்கவில்லை;
தற்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தையும் , மலேசியர்களின் அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் வண்ணமயமானன அர்த்தம் பொதிந்த நிகழ்சிகளும் மக்களின் பார்வையை ஈர்க்கவுள்ளன.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஜாரித் சோபியா ஆகியோர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
காலை 8 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், 76 பிரிவுகளில் 10,819 அணிவகுப்பு பங்கேற்பாளர்கள், 22 அணிவகுப்பு இசைக்குழுக்கள், 11 அலங்கார ஊர்திகள், 328 தரை, கடற்படை மற்றும் விமானப்படை சொத்துக்கள், 112 உழைக்கும் பிராணிகள் மற்றும் 22 மின்சார வாகனச் சொத்துக்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.
இதனைத் தொடர்ந்து விமான சாகசமும், "ரெந்தாக் மடானி, பாலுவான் டிராடிசி" (Rentak MADANI, Paluan Tradisi) என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் உள்ள தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறையால் ஒருங்கிணைக்கப்பட்ட "கெமா இன்னோவாசி மடானி" (Gema Inovasi MADANI) நிகழ்ச்சி நடைபெறும்.
இது ஒற்றுமை உணர்வைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய தாள வாத்தியங்கள் மற்றும் புதுமைகளின் சங்கமத்தைக் கொண்டிருக்கும்.
150 இசைக்கருவிகள் மற்றும் 700 பாரம்பரிய மற்றும் புதுமையான 'கொம்பாங்' மத்தளங்களைப் பயன்படுத்தி அந்த படைப்பு அரங்கேறும்.
நாட்டின் பலத்தைக் காட்டும் அணிவகுப்பில், தேசிய தலைமைத்துவ அகாடமியின், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் அதிகாரிகள், தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சேவை பயிற்சித் திட்டக் குழுவினர் ஆகியோர், பெரிய ஜாலுர் கெமிலாங் கொடியை ஏந்திச் செல்லவிருக்கின்றனர்.
தேசிய, அனைத்துலக அரங்கில் நாட்டிற்கு நற்பெயரை ஈட்டித் தந்த 2026 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற தேசிய விளையாட்டு வீரர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்களும் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.
நாட்டின் நல்வாழ்வினையும் பொருளாதாரத்தையும் குறிக்கும் பிரிவில், மஞ்சிஸ் மலேசியா (Munchy’s Malaysia), ஜூஸ் காபி (ZUS Coffee), சித்தி கதீஜா அப்பாரல் (Siti Khadijah Apparel Sdn Bhd), மலேசிய பாதுகாப்புத் தொழில் சங்கம், மிஸ்டர் டி.ஐ.ஒய் (MR. D.I.Y Group (M) Berhad), தேசிய கூட்டுறவுப் படை (Angkatan Koperasi Kebangsaan Malaysia Berhad) மற்றும் கார்சோம் (Carsome Sdn Bhd) உள்ளிட்ட சேவை வழங்குநர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் கூட்டணி இடம்பெறவிருக்கிறது.
மேலும் பொது தற்காப்புப் படை , சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் தீயணைப்பு - மீட்புத் துறை ஆகியவை பொது ஒழுங்குப் பாதுகாக்கும் தங்களது பங்கினை எடுத்துக் காட்டவுள்ளன.
மலேசியாவின் பழமையான இராணுவப் பிரிவான ஜொகூர் இராணுவப் படையும் இந்த அணிவகுப்பில் இணைகிறது.
இதற்கிடையில், மலேசியா வருகை ஆண்டு 2026-2027 பிரச்சாரத்திற்கான அலங்கார ஊர்திகள், மலேசியாவின் பல்வேறு சமூகங்களின் மாநில சுற்றுலா சின்னங்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பாரம்பரிய உடைகள் மற்றும் பாரம்பரிய இசைக்கருவிகளை சுமந்து வரவிருக்கின்றன.
விமான சேவைகளின் முக்கிய பங்காளிகளான மலேசியா ஏர்லைன்ஸ், ஏர்ஏசியா, பாடிக் ஏர் மற்றும் ஏர் போர்னியோ ஆகியவை இந்த ஊர்வலத்தை மேலும் உயிர்ப்பிக்கவுள்ளன.
இளைய தலைமுறையினர் மற்றும் குடும்பத்தினரிடையே கொண்டாட்டத்தின் ஈர்ப்பை அதிகரிக்க, பிரபலமான உப்பின் இப்பின் (Upin & Ipin) அனிமேஷன் கதாபாத்திரங்களும் இடம்பெறவுள்ளன.
தேசிய தின அணிவகுப்புடன், சிலாங்கூரில் உள்ள 36 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்களை ஒன்றிணைத்து, இசைக்கு ஏற்ப ஒத்திசைக்கப்பட்ட நகரும் வடிவங்களையும், ஒவ்வொரு பிரிவிலும் காட்சி மாற்றங்களையும் காண்பிக்கும் ஆற்றல்மிக்க மனித கிராபிக்ஸ் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இக்கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக, மலேசிய அரச விமானப்படையின் போர் விமானங்கள் நாட்டின் நிர்வாக மையத்தின் வானை கிழித்துச் செல்லும் விமான சாகசமும் இடம்பெறும்.
பிரபல பாடகர் ஃபைசல் தாஹிர் (Faizal Tahir) இசையமைத்துப் பாடிய 'அக்கு பெர்ஜான்ஜி' (Aku Berjanji) என்ற 2026 தேசிய - மலேசிய தினத்திற்கான கருப்பொருளை ஏந்தியப் பாடலுடன், காலை 10 மணியளவில் கொண்டாட்டம் நிறைவை எட்டும் .
இன்று காலை 5 மணித் தொடங்கி நாளை மாலை 6 மணி வரை நீடிக்கும் புத்ராஜெயாவின் முக்கியப் பகுதிகள் முழுமையாக மூடப்படுவதால், பொதுமக்கள் தங்களது பயணத்தைத் திட்டமிட்டு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







