கோலாலம்பூர், ஆகஸ்ட் 31: காஜாங் தாமான் வெஸ்ட் கன்ட்ரி அருகே சாலையோரத்தில் 29 வயது ஆடவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.
நேற்று அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நான்கு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார்.
தாக்குதலில் படுகாயமடைந்த அந்த ஆடவர் சிகிச்சைக்காக காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
காஜாங் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 307ஆவது மற்றும் 148ஆவது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் ஒருவருக்கு மெத்தாம்பெட்டமைன் வகை போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்தச் சந்தேக நபர் 1952ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 15(1)(a) பிரிவின் கீழும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், காஜாங் மாவட்ட காவல்துறை விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷாருல்ஹஸ்ராம் ரம்லியை 017-2530380 என தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







