திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்: விஸ்மா புத்ரா

29 ஆகஸ்ட் 2026, 2:52 AM
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, ஆகஸ்ட் 28: சீனா–நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, சீனாவின் திபெத் பகுதியில் உள்ள 36 மலேசியர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், அந்த 36 மலேசியர்களின் அடையாளம் மற்றும் தற்போதைய நிலை குறித்து சீன அதிகாரிகளுடன் மலேசிய வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா), தொடர்ந்து சரிபார்த்து வருவதாக அமைச்சின் இருதரப்பு உறவுகளுக்கான துணைச் செயலாளர் தெரிவித்தார்.

நேபாளத்தில் இன்னமும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள மலேசியர்களின் பட்டியலுடன் திபெத்தில் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள 36 பேரின் விவரங்களும் ஒப்பிடப்பட்டு வருவதாக டத்தோ சையட் முகமட் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் கூறினார்.

நேபாளம் அல்லது திபெத் பகுதியில் இன்னும் எத்தனை மலேசியர்கள் காணாமல் போயுள்ளனர், எத்தனை பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என்பதையும் உறுதி செய்த பின்னர் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.

திபெத்தில் உள்ள மலேசியர்கள் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விஸ்மா புத்ராவின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தற்போது சீன எல்லைப் பகுதியையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, புத்ராஜெயாவில் செயல்பட்டு வரும் வெளியுறவு அமைச்சின் செயல்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கு சமீபத்திய தகவல்களை வழங்குவதும் செயல்பாட்டு அறையின் முக்கியப் பணிகளாக இருக்கும்.

திபெத்தில் உள்ள மலேசியர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் வரை, தொடர்ந்து விசாரணை மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முகமட் ஹஸ்ரின் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மலேசியர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நேபாள அதிகாரிகள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

மேலும், அவர்களின் பயண ஆவணங்களின் நிலையும் முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருப்பதால், அதன்பின்னரே அவர்களை மலேசியாவுக்குத் திரும்ப அழைத்து வருவது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் விளக்கினார்.

தற்போதைய நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களை கண்டறிந்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே பிரதான முன்னுரிமையாக உள்ளது. .

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.