கோலாலம்பூர், செப். 3: நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் 25 குடும்பத்தினர் இதுவரை DNA மாதிரிகளை வழங்கியுள்ளனர்.
இதனை Solidariti Malaysia: Famili Dalam Harapan (MASFIH) அமைப்பின் பிரதிநிதி டாக்டர் ஆர். மணிவண்ணன் தெரிவித்தார்.
சில குடும்பத்தினர் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு நேரில் சென்று DNA மாதிரிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
காணாமல் போன அனைத்து மலேசியர்களின் குடும்பங்களிடமிருந்தும் DNA மாதிரிகளைச் சேகரிக்கும் பணியை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, காணாமல் போனவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைக்கு உதவ அவர்களின் தனிப்பட்ட பொருட்களையும் குடும்பத்தினர் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பல் துலக்கும் தூரிகை, சீப்பு, மஸ்காரா தூரிகை போன்ற தனிப்பட்ட பொருட்களுடன், காணாமல் போனவர் அணிந்திருந்த ஆடைகள், பயன்படுத்திய பொருட்களின் பிராண்ட், கைத்தொலைபேசி, காலணிகள் மற்றும் உடலில் காணப்படும் தனித்துவமான அடையாளங்கள் தொடர்பான தகவல்களையும் குடும்பத்தினர் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண்டெடுக்கப்படும் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படாமல் இருந்தால், அவற்றை அடையாளம் காணும் செயல்முறைக்கு இந்த அனைத்து தகவல்களும் உதவும் என்று மணிவண்ணன் விளக்கினார்.

இந்நிலையில், மலேசிய வெளியுறவு அமைச்சு நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு அதிகாரப்பூர்வக் குழுவொன்றை அனுப்பியுள்ளது.
தூதரக விவகாரங்கள் மற்றும் களத்தில் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு உதவுவதுடன், அங்குள்ள நிலவரம் தொடர்பான தகவல்களை நேரடியாகப் பெறவும் இந்தக் குழு ஒத்துழைக்கும் என அவர் தெரிவித்தார்.
அடையாளம் காணப்படாத சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைச் சேமித்து வைப்பதற்கான போதுமான வசதிகள் அங்கு இல்லை.
அதானல். சில சடலங்களை விரைவாக அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.







