புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 - நேபாள வெள்ளத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் மலேசியர்களின் குடும்பத்தினர், அடையாளம் காணும் நடவடிக்கைக்காக DNA மரபணு சோதனையைச் செய்யத் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இன்று விஸ்மா புத்ராவில், வெளியுறவு அமைச்சு நடத்திய சந்திப்பில் அது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதாக, தனது மனைவியை இன்னும் தொடர்புக் கொள்ள முடியாமல் இருக்கும் 57 வயது சிவக்குமார் காளிமுத்து தெரிவித்தார்.
"அதன் தொடர்பில் போலிசார் எங்களைத் தொடர்புக் கொள்வார்கள். அந்த சோதனைக்காக நான் எனது 3 பிள்ளைகளையும் அழைக்க வேண்டும் . எனது பிள்ளைகள் சிங்கப்பூர், கெடா, சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் உள்ளனர். அவர்கள் இன்னும் சோகத்தில் உள்ளனர்" என அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவச் சேர்ந்த மேலும் 17 பேர் அடங்கிய குழுவினருடன் தாம் கைலாயப் பகுதிக்குள் நுழையப் போவதாக கடைசியாகத் தமக்கு மனைவியிடமிருந்து தகவல் கிடைத்ததாக சிவக்குமார் கூறினார். அதற்குப் பிறகு அவரைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்றாரவர்.
நேபாள வெள்ளப் பாதிப்பிருந்த பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்படாமல் உள்ளன.
அந்த உடல்களை வைப்பதற்கான முறையான வசதி இல்லாததால் , உனடியாக அந்த உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
அதன் நோக்கமாக , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மரபணு சோதனைச் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.







