கோலாலம்பூர், ஆகஸ்ட் 30: நாட்டை சிறந்த முறையில் பாதுகாப்பதுடன், பல இனத்தவரின் ஒற்றுமையையும் மலேசிய மக்கள் தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.
இதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது 'எக்ஸ்' (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரம் என்பது, ஒரு நாடு தனது எதிர்காலப் பாதையைத் தானே நிர்ணயிக்கும் உரிமையையும், கண்ணியமிக்க மக்களாகவும் இறையாண்மை கொண்ட நாடாகவும் திகழ்வதற்கான தன்னம்பிக்கையையும் கொண்டிருப்பதாகும்.
இன்றைய தலைமுறை அனுபவிக்கும் அனைத்து முன்னேற்றங்களும், முந்தைய தலைமுறையினர் சிந்திய வியர்வை, இரத்தம் மற்றும் கண்ணீரின் பலனாகும்.
அதனால், முன்னோர்கள் தியாகம் செய்து பெற்றுத் தந்த நாட்டை மக்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் பாதுகாக்க வேண்டும் என பிரதமர் தனது பதிவில் கேட்டுக்கொண்டார்.
இன மற்றும் மாநில அடிப்படையிலான உணர்வுகளைக் காட்டிலும் மலேசியாவின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பிரதமர் வெளியிட்டுள்ள காணொளி உரையில், மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், இபான்கள், கடசான்கள், முருட்டுகள், பிடாயுக்கள் மற்றும் ஓராங் உலு உள்ளிட்ட பல்வேறு இன சமூகங்கள் ஒன்றிணைந்திருப்பதே மலேசிய மக்களின் மிகப்பெரிய பலம் என்று குறிப்பிட்டிருந்தார்.







