ஷா ஆலாம், ஆகஸ்ட் 29: நாளை பிற்பகல் புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெறவுள்ள தேசிய தின உரையின்போது, மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய திட்டங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிக்கவுள்ளார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விவகாரங்கள், தற்போதைய தலைமுறையின் பொறுப்புகள் மற்றும் நாட்டின் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தைப் பேண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல அம்சங்களைத் தமது உரையில் வலியுறுத்தவுள்ளதாகப் பிரதமர் கூறினார்.
இதனிடையே, தேசிய தினத்தை மலேசியர்கள் ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் கொண்டாட வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார்.
இன, சமய வேறுபாடுகளுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் அல்லது மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு தூண்டுதலையும் மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவும் அமைதியையும் மக்களின் நல்வாழ்வையும் தொடர்ந்து பாதுகாப்பதற்கு ஒற்றுமையும் பரஸ்பர மரியாதையும் மிகவும் அவசியம்.
சுதந்திரத்தின் பலன்களை அடுத்த தலைமுறைகளுக்கும் உறுதி செய்வதுடன், நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைப் பாதுகாப்பது ஒவ்வொரு மலேசியரின் பொறுப்பாகும்.







