சுங்கை புரோங், ஆகஸ்ட் 30 – நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை தயாராக உள்ளது.
இதனை அந்த அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி சைனல் நோர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து சிலாங்கூர் டத்தோ மந்திரி பெசார் அலுவலம் தகவல்களைப் பெற்று வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களை நாட்டிற்கு அழைத்து வருவது அல்லது அங்கு அவர்களுக்கு உதவி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் குறித்தும் அலுவலகம் ஆய்வு செய்யும் என்றார் அஹ்மட் அஸ்ரி.
வெளிநாடுகளில் பேரிடர்களுக்கு ஆளானவர்கள் உட்பட, துரதிர்ஷ்டவசமான சூழலை எதிர்கொள்ளும் சிலாங்கூர் மக்களுக்கு உதவ எம்.பி.ஐ அறக்கட்டளை எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்







