ஷா ஆலாம், ஆகஸ்ட் 10 — சிலாங்கூர் மாநில அரசின் சுகாதாரம் மற்றும் நலன் சார்ந்த சேவைகளை வழங்கி வரும் செலங்கா கைப்பேசி செயலியின் சேவைகள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள NINE Super செயலியில் ஒருங்கிணைக்கப்படவுள்ளன.
இவ்விரு செயலிகளையும் ஒருங்கிணைப்பது தொடர்பாக, NINE செயலியை மேற்பார்வையிடும் எம்பிஐ மற்றும் செல்கேட் நிறுவனங்களுக்கு இடையே பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் மாநில இஸ்லாம் மற்றும் புத்தாக்க விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் ஃபஹ்மி நாக் தெரிவித்தார்.
மாநிலத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், NINE மற்றும் SELangkah செயலிகளுக்கு இடையே உள்ள செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, இரு தளங்களின் திறன்களையும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அதன்படி, SELangkah செயலியில் இடம்பெற்றுள்ள டிஜிட்டல் சுகாதாரச் சேவைகளை, ‘மைக்ரோ-சர்வீசஸ்’ எனப்படும் சிறு சேவை கட்டமைப்பின் மூலம் NINE செயலியின் டிஜிட்டல் சூழலுக்குள் ஒருங்கிணைப்பது முக்கியமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, SELangkah பயனாளர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக, NINE செயலியின் மின்னணுப் பணப்பை மற்றும் நிதித் தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.
இவ்வாறான ஒருங்கிணைப்பு மூலம், இரு செயலிகளின் தனித்துவமான பலங்களைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளின் வசதி, செயல்திறன் மற்றும் விநியோக முறையை மேலும் மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, NINE செயலியானது பல்வேறு டிஜிட்டல் சேவைகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமாகும் என்று ஃபஹ்மி விளக்கினார்.
மாநில அரசாங்கம் மற்றும் அதன் மூலோபாய பங்காளிகள் வழங்கும் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் அணுகுவதற்கு வசதியாக, NINE செயலி ஒரு ‘ஒற்றை டிஜிட்டல் தளம்’ என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.







