புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 - நாளை புத்ராஜெயாவில் நடைபெறும் தேசியத் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பயணத்தை சுமூகமாக்க, அப்பகுதியில் 15,000 பொது கார் நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
PICC-புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையம் (3,500 கார் நிறுத்துமிடங்கள் ), பிரிசெண்ட் 9 ( 3,000 ), பிரிசெண்ட் 1 மற்றும் பிரிசெண்ட் 18 ( தலா 2,500) பிரிசெண்ட் 8 ( 2,000 ) பிரிசெண்ட் 8 -Terra@8 பகுதியில் 1500 கார் நிறுத்துமிடங்கள் உள்ளன.
Merdeka360 பேஸ்பூக் அகப்பக்கம் வெளியிட்ட வரைபட குறிப்பில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பிரிசெண்ட் 1-இல் வாகனமோட்டிகள் போதனிக்கல் கார்டன் பூங்காவில் உள்ள திறந்தவெளி கார் நிறுத்துமிடப் பகுதியில் வாகனங்களை நிறுத்தலாம்.
பிரிசெண்ட் 9- இல் புத்ராஜெயா செண்ட்ரல் ,பி.ஜெ.எஜ் டெஸ்தினா ( PJH Destina) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கார் நிறுத்துமிடங்கள் உள்ளன.
புத்ராஜெயாவிற்கு காரில் செல்வதோடு, பொது மக்கள் எம் .ஆர்.டி (MRT ), இ.ஆர்.எல் ( ERL) ரயில் சேவைகளுடன், இலவச ஷட்டல் பேருந்து சேவைகளையும் பயன்படுத்தலாம்.
நாளை புத்ராஜெயா சதுக்கத்தில் "மலேசியா மடானி: நல்வாழ்வை அனுபவிப்போம்" ( Malaysia MADANI: Kesejahteraan Dinikmati) எனும் கருப்பொருளில் நடைபெறும் தேசியத் தினக் கொண்டாட்டம் 80,000 வருகையாளர்களை ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகிறது.







