கூச்சிங், ஆகஸ்ட் 30 - இன்று காலை மணி 8 நிலவரப்படி கடுமையான புகைமூட்டம் காரணமாக சரவாக்கில் காற்றின் தரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக செரியன் மாவட்டத்தில் காற்றின் தூய்மைக்கேட்டு குறியீடு 364 என்ற ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் காற்று மாசு நிர்வகிப்பு முறையின் அகப்பக்கத் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகள் காலை 8:00 மணி நிலவரப்படி அவற்றின் குறியீட்டு அளவுகளின் அடிப்படையில் தனித்தனி தீவிர நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
300க்கு மேல் உள்ள குறியீட்டு அளவைக் குறிக்கும் ஆபத்தான பிரிவில் செரியன் மட்டுமே உள்ளது.
201 முதல் 300 வரையிலான மிகவும் ஆரோக்கியமற்ற பிரிவில் சமரஹான், கூச்சிங், லுபோக் அந்து, லுண்டு மற்றும் ஸ்ரீ அமான் ஆகிய பகுதிகள் அடங்கும்.
இதற்கிடையில், 101 முதல் 200 வரையிலான ஆரோக்கியமற்ற பிரிவில் தெபெடு, சரிகி, சிபு, பிந்துலு, சமலாஜு, முகா, காபிட், மிரி மற்றும் மிரி தொழிற்பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட பெருமளவிலான பகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ காற்றின் தரக் குறியீட்டு அளவு 0 முதல் 50 வரை இருந்தால் நல்லது என்றும், 51 முதல் 100 வரை மிதமானது என்றும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது என்றும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது என்றும், 300-க்கும் மேல் இருந்தால் ஆபத்தானது என்றும் வரையறுக்கிறது.







